கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண் வாக்குமூலம்

awiss
awiss

கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் குற்ற விசாரணைப் பிரிவில் நேற்றைய தினம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2019 நவம்பர் 25 ம் திகதி சுவிஸ் தூதரகத்தின் இலங்கைப் பணியாளர் மர்ப நபர்களால் கடத்தப்பட்டு தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் வழங்காதமையினால் விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் அவரை வாக்குமூலம் வழங்குமாறும் வெளிவிவகார அமைச்சு கேட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பெண் வாக்குமூலம் வழங்கும் நிலையில் இல்லை எனவும் உள ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அவரை சுவிசர்லாந்து அழைத்து செல்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றிருந்தது.

இதனால் அவர் நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்குமாறும் வாக்குமூலம் வழங்க குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறும் குற்ற விசாரணைப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் கடந்த வாரம் விண்ணப்பம் செய்தனர்.

குற்ற விசாரணைப் பிரிவின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளரை 9ம் திகதியிற்கு முன்னர் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் அன்றுவரை நாட்டைவிட்டு வெளியேற இடைக்காலத் தடைவிதித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கடத்தப்பட்ட சுவிசர்லாந்து பெண் அதிகாரி 2 வாரங்கள் கடந்த நிலையில் தனது சட்டத்தரணியுடன் நேற்று மாலை குற்ற விசாரணைத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.