மன்னார் வீட்டுத்திட்டங்களை பூரணப்படுத்தக் கோரி மக்கள் போராட்டம்

DSC 0164
DSC 0164

மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கான வீடுகளை முழுமையாக பூரணப் படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை(5) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாவட்டச் செயலகத்திற்கு முன் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்று கூடி பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் அனுசரணையில் நேசக்கரம் பிரஜைகள் குழு அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் இன்று வரை பூரணப் படுத்த முடியாத நிலையில் பயனாளிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் இருப்பதற்கு வீடு அற்றவர்களாகவும், இருந்த குடிசை வீட்டையும் அகற்றி தவித்து வரும் நிலையில் குறித்த வீட்டு திட்டத்தை பூரணப்படுத்தி தரும் படி கூறி இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜரை வழங்கும் நோக்கில் எதிர்பார்த்து காத்திருந்த போதும் மாவட்ட அரசாங்க அதிபர் பிரிதொரு கூட்டத்திற்கு சென்றுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மகஜரை ஏற்றுக்கொள்ள தாமதம் ஏற்பட்ட நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாவட்டச் செயலக வளாகத்திற்குள் சென்று மாவட்ட செயலக நுழைவாயிலுக்கு முன்ன ஒன்று திரண்டு காத்திருந்தனர்.

-எனினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வராத நிலையில் ஆவேசத்துடன் கோசம் எழுப்பி மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இதனை அடுத்து மன்னார் மாவட்ட மேலதிக செயலாளர் போராட்டம் முன்னெடுத்தவர்கள் முன்பாக வந்து ஜனாதிபதி மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கான மகஜரை பெற்றுக்கொண்டனர்.