வாகரை பிரதேசத்தில் வீதியானது சேதமடைந்துள்ளதால் மக்கள் கவலை

S3870009
S3870009
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குஞ்சன்குளம் கிரிமிச்சை வீதியானது உடைந்த நிலையில் காணப்படுவதால் மக்கள் பல்வேறு இடர்பாடுகளை அனுபவித்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மாங்கேணி பிரதான வீதியில் இருந்து குஞ்சன்குளம் மதுரங்கேணிக்குளம் செல்லும் வீதியானது கிரிமிச்சை தொடக்கம் குஞ்சன்குளம் வரை கடந்த வெள்ளத்தின் காரணமாக உடைந்த நிலையில் வீதியால் பயணிக்க முடியாத நிலைமையில் காணப்படுகின்றது.

அண்மையில ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீதியானது பெரிதும் உடைப்பெடுத்து காணப்படுகின்றது. அத்தோடு குறித்த வீதியில் அதிகம் வெள்ள நீர் காணப்பட்ட போது வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலை காணப்பட்ட போது பாரிய இன்னல்களுக்கு மத்தியில் பிரயாணங்களை மேற்கொண்டோம்.

ஒரு பெண்ணின் பிரசவத்திற்காக இவ்வீதியால் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்ட போது முச்சக்கரவண்டியில் குறித்த பெண்ணை அமர்த்தி முச்சக்கர வண்டியை மக்கள் இணைந்து சீரான வீதி வரை தூக்கிக் கொண்டு சென்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக காணப்பட்டது.
அத்தோடு பாடசாலை செல்லும் மாணவர்கள் இவ்வீதியால் பயணம் செய்கின்றனர். எங்களது பிள்ளைகளை நாங்கள் தோளில் தூக்கி வைத்து கொண்டு பாடசாலையில் விட்ட நிலைமையும் காணப்படுகின்றது. இதன் காரணமாக இங்கு வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

குறித்த பகுதியானது காடுகள் காணப்படும் இடமாக உள்ளதால் இங்கு யாரும் வருகை தந்து பார்வையிடுவதில்லை. தேர்தல் காலத்தில் மாத்திரம் அரசியல்வாதிகள் வருவார்கள் வீதிகளை சீர்செய்து தருவோம் என்று வாக்குகளை வேண்டுகின்றார்கள் ஆனால் யாரும் செய்வதில்லை.

எனவே இந்த அரசாங்கமாவது எங்களது நிலைமையினை கருத்தில் கொண்டு வீதியினை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுப்பதுடன் தற்போது நாட்டின் ஜனாதிபதியால் கொண்டுரவப்பட்ட வீதி புனரமைப்பு திட்டத்தின் மூலமாவது எங்களது வீதிகளை புனரமைத்து தருமாறு ஜனாதிபதியிடம் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஆகவே மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் ஆகியோர் துரித நடவடிக்கை மேற்கொள்ள முன்வாருங்கள்.