இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டாம்

37061f08 3864 4f83 bd2a 9f56250fc1a9
37061f08 3864 4f83 bd2a 9f56250fc1a9

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை காரணமாக நீதி கிடைக்காது ஏங்கும் உறவுகள் ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் இனிவரும் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு வழங்கிய கால அவகாசத்தினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளார் மிசேலா பஸ்லெற் யெறியா அவர்களிற்கு அனுப்பி வைப்பதற்காக ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமை தொடர்பாக’ எனும் தலைப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான குறித்த மனுவில்;

இலங்கையின் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நீதி கிடைக்காது ஏங்கும் எமது மன வேதனையையும், ஆதங்கத்தையும் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம்.

ஶ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பு யுத்தத்தின் போது அரச படைகளாலும், துணை இராணுவ குழுக்களாலும் கைது செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், மற்றும் யுத்தத்தின் இறுதி நாட்களில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களை யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகியும் வெளிப்படுத்தப்படவில்லை. மேற்படி விடயத்தில் நீதிக்கான செயன் முறைகளில் முன்னேற்றம் இல்லாமலிருப்பது தொடர்பில் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

2009 இல் ஶ்ரீலங்கா அரசு இனவழிப்பு ஒன்றின் மூலம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் ஐ.நா செயலாளர் நாயகம் பான்கி மூன் அவர்கள் மூவர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை நியமித்தார். போரின் போது கடைப்பிடிக்க வேண்டிய சரவதேச சட்டத்தின் அனைத்து பரிமாணங்களையும், இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தில் மீறியுள்ளதாக அந்நிபுணர் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

அதனைத் தொடர்ந்து ஜ.நா மனித உரிமைகள் பேரவை பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியது. மார்ச் 2014 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு அவ் அறிக்கையானது சர்வதேச நீதிபதிகள் வழக்கு தொடுநர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.

2015 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்ஆட்சியில் ஏறிய பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் 30/1 இலங்கை அரசாங்கத்தின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் இலங்கை அரசாங்கம் மீளிணக்கம் சம்பந்தமாக ஓர் கலந்தாய்வு செயலணியை கண் துடைப்பிற்காக உருவாக்கியது. குறிப்பாக பரிந்துரைகள் ஓர் கலப்பு பொறிமுறை உருவாக்கத்தை வழிமொழிந்தது. எனினும் இவ்வறிக்கையானது அரசாங்கத்தினால் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் செயன்முறைகளில் அவை முற்றாகப் புறமொதுக்கப்பட்டது.

2016 இல் நிறைவேற்றப்பட்ட சட்டமொன்றின் மூலம் காணாமல்போனோர் அலுவலகம் திறக்கப்பட்டது. அவ்வலுவலகம் 2018 இல் இருந்தே அமுலுக்கு வந்தது. 2018 இல் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவை வெறும் கண்துடைப்பிற்காகவே மேற்கொள்ளப்பட்டது.

காணாமல் போனோர் அலுவலகம் பல வழிகளில் காணாமலாக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்ந்து ஆட்கொணர்வு மனுக்களில் பிரதிவாதிகளுக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சார்பாக அவர்களை பாதுகாக்கும் வகையில் தோன்றிவருகிறது. ஒட்டு மொத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களை அரசு ஏமாற்றி வருகிறது. காணாமல் போனோர்களுக்கான அலுவலகம்(OMP) அமைச்சரவையின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அது சுயாதீனமற்றதாகவும் காணப்படுகின்றது.

தீர்மானம் 30/1 இல் உறுதிமொழி வழங்கப்பட்டவாறு வெளிநாட்டு வழக்கு தொடுநர்களை, நீதிபதிகளை நியமிக்க மாட்டோம் என முன்னாள் ஜனாதிபதியும், பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலைப்பாட்டில்தான் தற்போதும் கௌரவ ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சர்களும் சிங்கள பௌத்த பேரினவாதிகளும் உள்ளனர்.

எனவே மேற்படி காரணங்களைச் சுட்டிக்காட்டி ஶ்ரீலங்கா அரசுக்கு இனிமேலும் கால அவகாசம் வழங்க வேணடாம் எனவும், முழுமையான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணைக்கு பரிந்துரை செய்யுமாறும் கடந்த ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்னர் இலங்கையின் வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புக்கள், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புக்கள் மற்றும் ஏனைய ஒத்தகருத்துள்ள அமைப்புக்கள் மற்றும் நபர்களினால் இலங்கையில் நிலவிய சூழல் தொடர்பாகவும் சமாதானம், நீதி தொடர்பிலான செயன்முறைகளில் முன்னேற்றம் இல்லாமலிருப்பது தொடர்பிலும் கடிதம் ஒன்றும் தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அக்கடித்தில் வலியுறுத்தப்பட்ட விடயங்களை கவனத்தில் எடுத்து இனிவரும் ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் 2019 கூட்டத் தொடரில் நீங்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையில் உள்ளடக்குவீர்கள் எனும் எதிர்பார்பில் அக்கடிதம் தங்கள் மீது நம்பிக்கை கொண்டு அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும் எமது எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக எமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு ஶ்ரீலங்கா அரசுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டமையானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமான அரச உயர் மட்டத் தலைவர்களும், இராணுவ உயரதிகாரிகளும் பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக்கொள்ள வாய்ப்பளித்துள்ளது. இதனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய எமக்கும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அதிமேன்மை தங்கிய தாங்கள் பின்வரும் நிகழ்ச்சி சார் தலையீடுகளை ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரிற்கு முன்மொழிய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

1.சமர்ப்பிக்கும் அறிக்கையில் நீதியையும் பொறுப்புக் கூறலையும் சாத்தியப்படுத்த அவசியமான அரசியல் விருப்பு இலங்கை அரசிடம் இல்லை என்பதனால் ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் இனிவரும் கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கிய கால அவகாசத்தினை உடனடியாக முடிவுக்குக் கொணடுவர வேண்டுமென தாங்கள் முன்மொழிய வேண்டும்.

2.இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு, யுத்தக்குற்றங்கள், மனிதத்துவதற்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது ஐ.நா செயலாளர் நாயகம் அவர்களுக்குப் பரிந்துரை செய்ய தாங்கள் வலியுறுத்த வேணடும்.

3.வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான ஐ.நா குழு இலங்கையை முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேணடுமென ஐ.நா செயலாளர் நாயகத்திற்குப் பரிந்துரைக்க வேண்டும்.

4. அ) இலங்கைக்கான விசேட ஜ.நா அறிக்கையாளரை நியமிக்க வேண்டும்.

ஆ- வடக்கு – கிழக்கில் நிலவரத்தைக் கண்காணிக்கவும் மேமப்டுத்தவும், உறுதுணையாகவும் இருக்க ஜ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் ஒன்றை வடக்கு – கிழக்கில் நிறுவவேணடும் எனவும் மீளவும் வலியுறுத்துகின்றோம்.

என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.