தோட்டத் தொழிலாளர்கள் சம்மேளனத்தை ஸ்தாபிக்க வேண்டும்-வடிவேல் சுரேஷ்

download 9 2
download 9 2

எமது தொப்புள் கொடி உறவுகளான தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்று ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்காக மலையகத்திலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைய வேண்டியது அவசியம். மலையகத்திலுள்ள சகல தொழிற்சங்கங்களும் இணைந்து ‘ஒன்றிணைந்த மலையக தோட்டத் தொழிலாளர்கள் சம்மேளனம்’ ஒன்றை உருவாக்குவதற்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய தொழிற்சங்க இல்ல கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், “தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்று 1000 ரூபா சம்பளம் வழங்கக்கோரி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை எதிர்த்து 20 கம்பனிகள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளமையானது அரசாங்கத்துக்கு கம்பனிகாரர்கள் விடுத்துள்ள பாரிய சவால் ஆகும்.

1000 ரூபா சம்பளம் தொடர்பில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று செயற்பட 2 கம்பனிகள் இணங்கியுள்ளது. எனினும் 20 கம்பனிகள் இணங்க மறுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இது அரசாங்கத்துக்கு கம்பனிகள் விடுக்கும் பாரிய சவால் ஆகும். அதுவும் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள அரசாங்கத்துக்கு, ஜனாதிபதிக்கு, பிரதமருக்கு, தொழிற்துறை அமைச்சுக்கு, சம்பள நிர்ணய சபைக்கு விடுத்துள்ள பாரிய சவாலாகும்.

இந்த அரசாங்கத்தினால் பல்வேறு வர்த்தமானிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. என்ற போதிலும் ஒரு வர்த்தமானிக்கு கூட எதிர்ப்புத் தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. ஆயினும், தோட்டத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். சம்பள விவகாரத்தை இழுபறி நிலைக்கு கொண்டு செல்வதற்காகவே இந்த நாடகம். இந்த அரசாங்கம் பிள்ளையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுகின்றது. 1000 ரூபா சம்பளம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், மறைமுக சக்திகள் அனைவருக்கும் கடவுள் தண்டனை வழங்கவேண்டும். அவர்கள் பரம்பரையினரும் அழிந்துபோக வேண்டும்” என்றார்.

எமது தொப்புள் கொடி உறவுகளுக்காக மலையத்திலுள்ள 15 இலட்சம் இந்திய வம்சாவளி மக்களும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என மேலும் அவர் தெரிவித்தார்.

மேலும், மலையத்திலுள்ள சகல தொழிற்சங்கங்களும் இன, மத, ஜாதி, மொழி, கட்சி பேதமின்றி ஒன்றாக இணைந்து போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.