ஐ.தே.கவில் மீண்டும் இணையும் பிரதேச சபை உறுப்பினர்கள்

download 10 2
download 10 2

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் தொடர்பில் பொய் பிரசாரங்களுக்கு ஏமாந்தே அதிகமான பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றனர். என்றாலும் தற்போது அவர்கள் உண்மை நிலைமையை உணர்ந்து மீண்டும் கட்சியில் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என ஐக்கிய தேசிய கட்சி வாரியபொல தொகுதி அமைப்பாளர் தனுஷ்க பாலசூரிய தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொடர்பாக எமது கட்சியில் இருந்தவர்கள் சிலரே பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர். அவர்களின் பொய் பிரசாரத்துக்கு ஏமாந்து பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் எம்மில் இருந்து பிரிந்து சென்றவர்களுடன் இணைந்து கொண்டனர். தற்போது அவர்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் தற்போது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அரசாங்கத்துக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் இல்லை. அதனால் ஐக்கிய தேசிய கட்சியின் தேவையை ஆதரவாளர்கள் உணர்ந்து வருகின்றனர். எனவே பிரிந்து சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணைந்து கட்சியை பலப்படுத்த முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கின்றேன் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த கட்சியில் மீண்டும் இணைந்துகொண்ட வாரியபொல பிரதேச சபை உறுப்பினர் ஜே.எஸ். மாயாதுன்ன குறிப்பிடுகையில், அரசாங்கத்துக்கு சவால்களை ஏற்படுத்தக்கூடிய பல தலைவர்கள் எமது கட்சியில் இருக்கின்றனர். என்றாலும் கட்சி பிளவுபட்டதால் அவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருக்கின்றனர். ராஜபக்ஷ்வினருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையிலேயே கட்சியில் இருந்து பிரிந்து சென்று, புதிய தலைவருக்கு ஆதரவளித்தோம். ஆனால் அந்த தலைவர் மற்றும் எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு அரசாங்கத்துக்கு பாரிய சவாலை ஏற்படுத்த முடியாமல் இருப்பதை காண்கின்றோம்.

அதனால் பொருளாதார ரீதியில் நாடு பாரிய பிரச்சினைக்கு ஆளாகி இருக்கின்றது. இவ்வாறான நிலையில் அரசாங்கத்துக்கு பாரிய சவாலை ஏற்படுத்த நாடாளுமன்றத்துக்குள்ளும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே முடியும். அதனால் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த அனைவரும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்றார்.