அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் மீட்கப்பட்ட தொலைபேசி குறித்து விசாரணை

download 16 1
download 16 1

ரஞ்சன் ராமநாயக்க தடுத்து வைக்கப்பட்டுள்ள அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் சிறை அறைக்கு அருகில் கையடக்க தொலைபேசியொன்று மீட்கப்பட்ட சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு நடவடிக்கை தொடர்பான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த கையடக்க தொலைபேசி, சிறையில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக 4 வருடம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் சிறை அறைக்கு அருகில் கடந்த 15 ஆம் திகதி குறித்த கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டிருந்தது.

ஈசி கேஷ் ஊடாக 5 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டு குறித்த கையடக்க தொலைபேசி, கொண்டுவரப்பட்டுள்ளமை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையினுள் செல்பி படம் எடுத்தமை தொடர்பிலும் ரஞ்சன் ராமநாயக்க மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவரை வெளியாட்கள் சந்திப்பதற்கும் இரண்டு வாரங்கள் தற்காலிக தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வழங்கப்பட்டிருந்த தொலைபேசி உரையாடல் வசதியையும் சிறைச்சாலைகள் திணைக்களம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.