தவிசாளரின் கோரிக்கை; வாதரவத்தைக்கான போக்குவரத்தை ஆரம்பிக்க அமைச்சர் பணிப்புரை!

30419972 10208789010121808 4501253326451983571 o 1
30419972 10208789010121808 4501253326451983571 o 1

வாதரவத்தை கிராமத்திற்கான பொதுப் போக்குவரத்து சேவையினை உடன் ஆரம்பிக்குமாறு வலிகாமம் கிழக்குத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விடுத்த கோரிக்கையை ஏற்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம அதிகாரிகளுகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இன்றைய தினம் (17) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகமவும் கலந்து கொண்டார். அவரிடம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ், போருக்கு முன்னர் கிராமங்கள் பலவற்றுக்கு இடம்பெற்ற சேவைகளை இலங்கை போக்குவரத்துச் சபை நிறுத்தியுள்ளது.

இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி அரசின் பொதுப்போக்குவரத்துச் சேவைகள் சீராக இடம்பெறவேண்டும். அச்செழு கிராமத்திற்கான போக்குவரத்து சேவைகளும் இடம்பெறுவதில்லை. எனவே நிறுத்தப்பட்டுள்ள சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து மீளவும் போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்படவேண்டும். வாதரவத்தைக்கான சேவை முன்னுரிமை அடிப்படையில் அவசியமாகவுள்ளது எனக்கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து போக்குவரத்துச் சபை அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த அமைச்சர், வாதரவத்தைக்கான போக்குவரத்துச் சேவையினை தாமதமின்றி ஒழுங்குபடுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதேவேளை வடக்கிற்கு வெளியேயான பயணங்களின்போது பேருந்துகள் உணவுக்காக தரிக்கும் இடங்கள் உணவுப்பண்டங்களை அதிகமான விலைக்கு விற்பனை செய்கின்றனர். கட்டுபாடு அற்ற விலைக்கு பொருட்களைவிற்பனை செய்யாத இடங்களில் பேருந்துகளை நிறுத்துவதைத் தவிர்க்குமாறும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் கோரிக்கை விடுத்தார். இதற்கு அரச பேருந்துகள் நூறுகிலோ மீற்றருக்கு ஒரு அங்கீகாரம் பெற்ற உணவகத்திலேயே நிறுத்த பணிக்கப்பட்டுள்ளது. அவ் இடங்களில் போக்குவரத்து சபையின் உரிமம் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அங்கு விலைகள், சுகாதார நடைமுறைத்தவறுகள் இடம்பெறின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.