வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஜெய்க்கா திட்டத்தில் 24 இலச்சம் ரூபா நிதி மோசடி செய்த கணக்காளருக்கு விளக்கமறியல்!

6734ae5c 1508648f fraud 850x460 acf cropped
6734ae5c 1508648f fraud 850x460 acf cropped

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஜெய்க்கா திட்டத்தில் 24 இலச்சம் ரூபா மோசடி தொடர்பாக கைது செயயப்பட்ட திட்டத்தின் கணக்காளரை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் றிஸ்வான் நேற்று செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டார்.

ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்திக்காக 2010 தொடக்கம் 2014 வரையிலான நன்கொடையாக பணம் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கணக்காளர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நியமிக்கப்பட்ட கணக்காளர் குறித்த காலப்பகுதியில் அப்போது கடமையாற்றிய நிலையில் 24 இலச்சத்து 39 ஆயிரத்து 200 நூற்று 85 சதம் (2439200.85) பணத்தை மோசடி செய்துள்ளதாக கடந்த 2019 ம் ஆண்டு இத்திட்டத்தின் ஓப்பந்தகாரரினால் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசேட குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் துசார பிரேமானந்த தலைமையிலான குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நிதி மோசடி தொடர்பாக கணக்காளரை நேற்று செவ்வாய்க்கிழமை (16) கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றின் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.