நாயாறு கடற்றொழிலாளர் விவகாரம்! 150 தென்னிலங்கை படகுகளுக்கு முல்லைத்தீவில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி!

IMG 20210319 WA0099
IMG 20210319 WA0099

முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் தென்னிலங்கை மீனவர்களின் தொழில் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இன்று மாலை இடம்பெற்றது

அந்தவகையில், நாயாறு பிரதேசத்தில் தொழிலில் ஈடுபட்டுவரும் சிலாபம் கறுக்குப்பனை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 150 படகுகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும், முல்லைத்தீவு மாவட்ட மீனவர் பிரதிநிதிகளும் கருக்குப்பனை மீனவர் பிரதிநிதிகளும் இணைந்த குழு ஒன்றினை அமைத்து, அனுமதிக்கப்படாத படகுகள் மற்றும் சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவது எனவும் பொது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

நாயாறுப் பிரதேசத்தில் பூர்வீகமாக தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார் 25 படகுகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் ஒப்புதலுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட படகுகளுக்கு கடற்றொழில் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் 1000 இற்கு மேற்பட்ட படகுகள் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதாக மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்

இதனால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அனுமதி பெறப்படாத படகுகள் மற்றும் சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவதற்கும் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவளை, கரைவலைத் தொழிலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இன்றைய கலந்துரையாடலில், கரை்துறைப்பற்று பிரதேச செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட்ட அதிகாரிகள், கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.