வவுனியாவில் சிங்கள பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பெற்றோரால் குழப்பநிலை

IMG20210322095551 01
IMG20210322095551 01

வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமி்க்குமாறு கோரி தெற்கு பிரதேச செயலகம் இன்று (22) முற்றுகையிடப்பட்டது.

அண்மையில் அரசாங்கத்தால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட 6 பேர் மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் பாடசாலை தவணை விடுமுறையையடுத்து அவர்கள் வேறு செயற்திட்டத்திற்காக மீள அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனால் தமது பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தை இன்று முற்றுகையிட்டிருந்தனர்.

ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவரகளின் கல்விச்செயற்பாடுகள் பின்னதங்கி உள்ளது. எனவே ஆசிரியர் வெற்றிடத்தை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கையினை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். முற்றுகையிட்ட மக்கள் பிரதேச செயலகத்தின் நிர்வாக கட்டத்திற்குள் சென்றமையால் சற்றுநேரம் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரதேச செயலாளர் போராட்டக்காரர்களுடன் முன்னெடுத்த பேச்சு வார்த்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டிருந்ததுடன், நிலமை சுமூகமாகியிருந்தது.

இதன் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் அசங்க காஞ்சனகுமார, பாடசாலை விடுமுறை விடப்பட்டதையடுத்தே குறித்த 6 ஆசிரியர்களையும் வேறு செயற்திட்டத்திற்காக மீள அழைத்திருந்தோம். எனினும் ஒருசில நாட்களில் அவர்களை மீண்டும் பாடசாலைக்கு நியமிப்பதற்கான நடவடிக்கையை ஏற்கனவே எடுத்துவிட்டோம். என்றார்.