வௌிநாட்டினரை தனிமைப்படுத்தும் காலப்பகுதி 7 நாட்களாகக் குறைப்பு

isolation
isolation


வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டில் தனிமைப்படுத்துவதற்கான காலப்பகுதி 14 நாட்களிலிருந்து 07 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் புதிய வழிகாட்டல்கள் அடங்கிய கோவையொன்று வௌியிடப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சுகாதார வழிகாட்டல்கள் இன்று (23) முதல் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது, கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு வழிகாட்டல் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டினர், இலங்கைக்கு வருகை தருவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமானதெனவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டிற்கு வருகை தருவதற்கு 96 மணித்தியாலங்களுக்கு முன்னர் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் கொரோனா தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும் என்பதுடன், நாட்டிற்கு வருகை தந்த பின்னர் மீண்டும் 24 மணித்தியாலங்களில் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், இத்திட்டத்தின் கீழமைந்த முதலாம் அடைவு ஹோட்டல்களில் வௌிநாட்டினர் தங்க வேண்டுமென்பதுடன், 07 நாட்களின் பின்னர் மீளவும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுமென சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

இந்த நடைமுறைகளையடுத்தே, வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தருவோர் சமூகமயமாக முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்று 05 கொரோனா மரணங்கள் பதிவாகின.

வேஉட, நுகத்தலாவ, கடவத்தை, பண்டாரகம மற்றும் காலி பகுதிகளை சேர்ந்த 78, 68, 51 மற்றும் 80 வயதானவர்களே உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.