மாகாண சபை முறையை ஒழிக்குமாறு அமைச்சரவையிலும் வலியுறுத்துவேன் :சரத் வீரசேகர சண்டித்தனம் !

sarath Weerasekara 300x200 copy
sarath Weerasekara 300x200 copy

மாகாண சபை முறைமை ஒழிக்கப்படவேண்டும் என்ற எனது நிலைப்பாடு ஒருபோதும் மாறாது. அதற்காகத்  தொடர்ந்தும் குரல் கொடுப்பேன். அமைச்சரவையிலும் கருத்துகளை முன்வைப்பேன். என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

மாகாண சபை முறைமைக்கு அமைச்சர் சரத் வீரசேகர கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார். ஆனாலும், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

மாகாண சபை முறைமையை ஒழிப்பேன் என நான் கூறவில்லை. அம்முறைமைக்கு எதிரானவன் நான். எனவே, குறித்த முறைமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால் அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன்.

மாகாண சபை முறைமை தொடர்பில் நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடும்போது எனது கருத்துக்களை முன்வைப்பேன். மாகாண சபை முறைமை தொடர்பான எனது எதிர்ப்பு ஒருபோதும் மாறாது – என்றார்.

அதேவேளை, புர்கா தடை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளேன். முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலேயே அமைச்சரவைக்குப் பத்திரம் வரும். அந்தவகையில்தான் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், ஓரிரு வாரங்களில் அமைச்சரவைக்குக் குறித்த பத்திரம் நிச்சயம் வரும் – என்றார்