இந்தியா நடுநிலை வகித்தாலும் தீர்வு விடயத்தில் அக்கறை – சம்பந்தன்

f6b0bb3c r. sambanthan 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
f6b0bb3c r. sambanthan 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்தாலும்கூட தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு விடயத்தில் அதிக சிரத்தை கொண்டு செயற்படுகின்றது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 46 ஆவது அமர்வில் பிரிட்டன் தலைமையிலான நாடுகளால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மான விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்தாலும்கூட அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் ஒரு தெளிவான அறிக்கையை அவர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள்.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமத்துவத்தின் அடிப்படையில்,நீதியின் அடிப்படையில்,கெளரவத்தின் அடிப்படையில் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்ற கருத்தை இந்திய மத்திய அரசு வலியுறுத்தியிருக்கின்றது.

இதை நிறைவேற்றுவதற்கு இந்தியா இயன்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்தக் கருமத்தில் எங்களுடைய ஒத்துழைப்பும் பரிபூரணமாக இருக்கும்” – என்றார்.