இளைஞர்கள் தொழில்வாய்ப்பு என்கின்ற ஒரு மாயைக்குள்ளே சிக்குண்டு தவிக்கின்றார்கள்-நா.உ கலையரசன்!

IMG 20210329 162630
IMG 20210329 162630

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற முன்முனைப்பினை இந்த அரசாங்கம் ஏன் எடுக்கின்றது என்பதை மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை இல்லாமல் செய்துவிட்டால் அவர்களுடைய நிகழ்ச்சி நிரைலைத் தமிழ்ப் பிரதேசங்களிலே செவ்வனே செய்து முடித்துவிடலாம் என்ற ஒரு எண்ணப்பாட்டை அரசாங்கம் வைத்திருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

இன்று திருக்கோவிலில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது வடக்கு கிழக்கிலே அம்பாறை மாவட்டம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இலங்கையில் இனக்கலவரம் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டதே இங்கிருந்துதான். நாம் இங்கு மூன்றாம் தரப் பிரஜைகளாக ஆக்கப்பட்டமையால் தொடர்ச்சியாகப் பிரச்சினைகளை முகங்கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த அடிப்படையில் இங்கு எமது கட்சியைப் பலப்படுத்த வேண்டியது காலத்தின் கடப்பாடாகும்.

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் மிகத் தீவிரமாக இருந்தால் நாம் எமது கட்சியை முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு போக முடியும். எல்லாவற்றிற்கும் கட்சித் தலைமைகள் தான் வரவேண்டும் என்று இல்லை. எமது கட்சியை வளர்க்க வேண்டுமாக இருந்தால் எமது அடிமட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் மிகவும் தெளிவாகச் செயற்பட வேண்டும்.

இந்த மாவட்டத்தில் எமது மக்கள் ஏனைய மாவட்டத்து மக்களை விட அந்நிய சமூகத்தால் துன்புறுத்தப்பட்டும், இழப்புகளைச் சந்தித்த மக்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால் எமது மக்கள் தற்போது தடம் மாறிய செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. இந்த மாவட்டதில் எமது மக்களுக்குப் பல ஆசைவார்த்தைகளைக் கூறியவர் தற்போது எங்கே என்ற கேள்வியை மக்களே கேட்க வேண்டும். அவ்வாறானதொரு நிலைமையில் கட்சியை மாத்திரம் நாங்கள் குறை சொல்ல முடியாது.

எமது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடிவரன் அவர்களால் இங்கு எத்தனையோ பாரிய அபிவிருத்திகள் இடம் பெற்றுள்ளன. இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது. தற்போதுள்ள இளைஞர்கள் தொழில்வாய்ப்பு என்கின்ற ஒரு மாயைக்குள்ளே சிக்குண்டு தவிக்கின்றார்கள். ஆனால் அவ்வாறான வாக்குறுதிகள் கொடுத்தும் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களுக்கு எவ்வித வேலைவாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. இவ்வாறக தமிழர்கள் ஏமாற்றப்படுபவர்களாகவே இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை நாங்கள் ஒவ்வொருவரின் வீடு வீடாகச் சென்று சொல்ல முடியாது. இதனை மக்களே நன்கு ஆய்வு செய்ய வேண்டும்.

திருக்கோவிலில் இடம்பெறும் இல்மனைட் அகழ்வு பிரச்சினை சம்மந்தமாக இம்மாதம் 23ம் திகதி அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது அவ்வாறு ஏதும் அனுமதி கொடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பில் திருக்கோவில் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயும் அதனை நிறுத்துவதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் தற்போதும் அந்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு எதையும் செய்து தரமாட்டார்கள். என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதனை எமது இளைஞர்களும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.