வவுனியாவில் பழமைவாய்ந்த மரம் சட்டவிரோதமாக வெட்டி வீழ்த்தப்பட்டது!

IMG 20210330 175217
IMG 20210330 175217

வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் காணப்பட்ட பழமைவாய்ந்த மதுரமரம் நேற்றையதினம் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளது.

இதுபற்றி தெரியவருவதாவது,

வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயமானது ஆரம்பகாலத்தில் குறித்த மதுரமரத்தின் கீழே அமையப்பெற்றிருந்தது. பின்நாட்களில் குறித்த ஆலயம் பெரும் ஆலயமாக அமைக்கப்பட்டதுடன். இவ்வாலயமானது வவுனியாவில் உள்ள முக்கிய ஆலயங்களில் ஒன்றாக விளங்குவதுடன் இவ்வாலய தேர்திருவிழாவில் பெருந்திரளான மக்களும் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேர் திருவிழா காலங்களில் தேர் ஓடும் வீதியில் இம்மரம் அமைந்துள்ளதாகவும், தேர்திருவிழாவின் போது மிக சிரமத்துடனே தேரினை இம்மரம் இருக்கும் பகுதியின் ஊடாக இழுக்க வேண்டி உள்ளது என்ற காரணத்தை காட்டியே நேற்றையதினம் ஆலய பரிபாலனசபையினரால் குறித்த மரம் வெட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுமக்களினால் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் வவுனியா காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆலய பரிபாலனசபையினருக்கு எதிராக வவுனியா காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நாளையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்மரத்தினை வெட்டுவதற்கு வவுனியா பிரதேச செயலகத்தில் ஆலய பரிபாலனசபையினரால் அனுமதி கேட்கப்பட்ட போதும் இதுவரை வழங்கப்படாத நிலையிலேயே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது என ஆலயத்தின் பரிபாலனசபை தலைவரும் நகரசபை உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை காடழிப்புக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதோடு, இலங்கை பூராவும் மரம் நடுகை செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டு வரும் நிலையில் ஆலய பரிபாலனசபையினரின் இச்செயற்பாடு வேதனைக்குரிய விடயமாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.