4 வகையான பொலித்தீன் – பிளாஸ்டிக் உற்பத்திகளுக்கு இன்று முதல் தடை!

plastic straws spoons 1
plastic straws spoons 1

இன்று முதல் 4 வகை பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திகளை, இலங்கையில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்கினால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகளை கவனத்திற்கொண்டு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அதிகார சபைத் தலைவர் சிறிபால அமரசிங்க, நான்கு பொலித்தீன் வகைகளுக்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும், விவசாய இரசாயனம் அடங்கிய போத்தல் மற்றும் பக்கற்றுக்கள் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் காது துடைப்பான்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன.

எனினும், மருத்துவ ஆய்வு மற்றும் வைத்தியசாலை பயன்பாட்டுக்கான உற்பத்திகள் தடைசெய்யப்படவில்லை.

இதேநேரம், சஷே பக்கற்றுக்களுக்கும், காற்றடைக்கப்பட்ட பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபைத் தலைவர் சிறிபால அமரசிங்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை மற்றும் ஒளடத பயன்பாடு, உணவு பயன்பாட்டுக்கான சஷே பைக்கற்றுக்கள் தடைசெய்யப்படவில்லை.

20 கிராம் மற்றும் 20 மில்லிலீற்றருக்கு குறைந்த நிறைகொண்ட அனைத்து சஷே பக்கற்றுக்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபைத் தலைவர் சிறிபால அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, குறித்த அனைத்து உற்பத்திகளுக்கும் நாட்டில் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இறக்குதி செய்யப்படும் பொருட்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறிருப்பினும், தற்போது சந்தையில் உள்ள பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேநேரம், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபைத் தலைவர் சிறிபால அமரசிங்க, பொதுமக்கள் பயன்படுத்துவதை தங்களால் தடை செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம், உற்பத்தியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தான் மாற்றுவழியை முன்வைக்க வேண்டும் என்றும், தற்போது அவர்கள் சிறப்பாக செயற்படுவதாகவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபைத் தலைவர் சிறிபால அமரசிங்க தெரிவித்துள்ளார்.