செனட்சபை உருவாக்கப்படவேண்டும் என்கிறது சுதந்திரக்கட்சி

சுதந்திரக்கட்சி
சுதந்திரக்கட்சி

மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைத்து அவ்வதிகாரங்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குவது தொடர்பில் புதிய அரசியலமைப்பில் விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும்.

சோல்பரி அரசியமைப்பில் சிறுபான்மையின மக்களுக்கு காப்பீடாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் சபையான செனட் சபையை உத்தேச புதிய அரசியமைப்பில் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், தொழில் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் சுதந்திர கட்சியின் யோசனைகளை மகாநாயக்க தேரர்களுக்கு நேற்று கையளித்ததன் பின்னர் கண்டியில் இடம்பெற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஒரு நாடு – ஒரு சட்டம்

பல்லின சமூகம் வாழும் நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுவது இயல்பானதொன்றாகும். ஒரு நாடு- ஒரு சட்டம் என்ற கொள்கையினை அனைத்து இன மக்களும் எவ்வித வேறுப்பாடுமின்றி பின்பற்ற வேண்டும்.

சட்டத்தின் முன் எத்தரப்பினருக்கும் சலுகை வழங்க கூடாது. இனத்தை அடிப்படையாக கொண்டு அரச வரப்பிரசாதங்கள் வழங்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

பொது சட்டத்தை அனைத்து இன மக்களும் மதித்து ஏற்றுக்கொள்ளும் சூழலை புதிய அரசிலமைப்பின் ஊடாக ஏற்படுத்த வேண்டும்.

சட்டம் சிறந்த முறையில் தெளிவானதாக காணப்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் ஆராய நீதிமன்ற கட்டமைப்பிற்குள் விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும்.

செனட் சபை முறைமை

மாகாண சபை முறைமையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.

புதிய அரசியலமைப்பில் செனட் சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பல அடிப்படை பிரச்சினைகளுக்கு செனட் சபை ஊடாக தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.

சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மையின மக்களின் நல காப்பீடாக நாடாளுமன்றின் இரண்டாம் மன்றமாக செனட் சபை அறிமுகப்படுத்தப்பட்டது.

1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பில் இம்மன்றம் நீக்கப்பட்டது. ஆகவே மீண்டும் புதிய அரசியலமைப்பில் செனட் சபை முறைமையினை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளோம்.

தேர்தல் முறைமை

தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமை அரசியல் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் காணப்படுகிறது.

விருப்பு வாக்கு முறைமை அரசிய்ல களத்தில் முரண்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஆகவே நாட்டுக்கு பொருந்தும் வகையிலான தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

70 வீதம் தொகுதி ரீதியிலான முறைமையும், 30 வீதம் விகிதாசார முறைமையும் புதிய தேர்தல் முறைமை கொண்டிருக்க வேண்டும். தேர்தல் முறைமையில் முழுமையாக மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த்தில் தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என வாக்குறுதி வழங்கியே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டடது.

தேர்தல் முறைமை குறித்து வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. ஆகையால் இம்முறையும் ஏமார தயாரில்லை. புதிய அரசியலமைப்பில் தேர்தல் முறைமை குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும்.