புற்று நோய் மூலக்கூறுள்ள எண்ணெய் விவகாரத்திற்கு வர்த்தக அமைச்சரே பொறுப்பு

oil
oil

புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறுகள் அடங்கிய தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டமைக்காக வர்த்தக அமைச்சர் பதவி விலக வேண்டும். அவ்வாறில்லை என்றால் இதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் சமூகத்திலும் குரல்கொடுப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

மக்களின் பாதுகாப்பிற்காக முன்னிற்க வேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாகும். ஆனால் தற்போதைய அரசாங்கத்தால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்படாத எண்ணெய்க்கான இறக்குமதி வரி குறைப்பட்டுள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் இலங்கையில் சுத்திகரிக்கப்படுகிறது.

இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போத்தலில் இலங்கையில் தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்யை எவ்வாறு இலங்கை தயாரிப்பு என்று கூற முடியும்? அவ்வாறெனில் இறக்குமதி செய்யப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்ற எண்ணெய்யும் இலங்கையில் தயாரிக்கப்படும் எண்ணெய்யும் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

சுகாதார அமைச்சு, சுங்க திணைக்களம் மற்றும் நுகர்வோர் அதிகாரசபை என்பன இது தொடர்பில் பரிசோதித்திருக்கின்றனவா? சர்ச்சைக்குரிய எண்ணெய் சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்குமாயின் அதற்கான பொறுப்பை யார் ஏற்பது ? இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாட்டவர்களுக்கு ஆரோக்கியமான எண்ணெய்யை வழங்குவதற்கு முன்னர் நாட்டு பிரஜைகளுக்கு அவற்றை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம் .

சர்ச்சசைக்குரிய எண்ணெயை இறக்குமதி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மாத்திரமின்றி இதனை மீள் ஏற்றுமதி செய்யாது அழிக்க வேண்டும். ஒரு சில நிமிடங்களில் 250 உயிர்களை பலியெடுத்த சஹ்ரானின் தீவிரவாத செயற்பாட்டை விட இது மோசமான செயலாகும். வர்த்தக்துறை அமைச்சர் பதவி விலக வேண்டிய நிலைமை நிச்சயம் ஏற்படும். அவ்வாறில்லை என்றால் அதனை வலியுறுத்தி மக்களின் சார்பில் நாம் குரல் கொடுப்போம் என்றார்.