மார்ச் மாதத்தில் 25 இலங்கை மீனவர்கள் இந்திய தரப்பால் கைது

9a12aa78 download 28
9a12aa78 download 28

இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினரால் அந்நாட்டு கடற்பரப்பில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 25 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு , 4 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த 4 படகுகளிலும் இருந்து ஹெரோயின் மற்றும் துப்பாக்கிகள் என்பனவும் இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவிக்கையில் ,

இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினரால் மார்ச் 5 ஆம் திகதி மீன்பிடிப்படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளதோடு , அதிலிருந்த 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப் படகு சிலாபத்திலிருந்து சென்றதாகும். அத்தோடு இந்த படகிலிருந்து 200 கிலோ கிராம் ஹெரோயின் காணப்பட்டதாகவும் , குறித்த படகை இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவு சுற்றி வளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது , அதிலிருந்த ஹெரோயின் தொகை கடலில் வீசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினரால் மார்ச் 15 ஆம் திகதி மீண்டும் 3 இலங்கை மீன் பிடி படகுகளும் அவற்றிலிருந்த 19 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம் மூன்றில் ஒரு படகிலிருந்து 350 கிலோ கிராம் ஹெரோயின் தொகையும் , ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் ஐந்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த படகுகள் தங்காலை மற்றும் இலங்கையின் தென் பகுதிகளிலிருந்து சென்றவையாகும்.

அதற்கமைய குறித்த 4 படகுகளிலிருந்தும் 25 மீனவர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு , சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.