கல்வி கற்பதற்கு செல்வதாக தெரிவித்து புகைத்தலில் ஈடுபட்ட மாணவர்களை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்!

Smoking
Smoking

பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு கற்பதற்கு செல்வதாக கூறி அங்கு செல்லாது மட்டக்களப்பு கூளாவடி பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் புகைத்தலில் ஈடுபட்டுக் கெண்டிருந்த உயர்தர மாணவர்கள் 6 பேரை காவல்துறையினர் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று பெற்றோரை வரவழைத்து எச்சரித்து விடுவித்த சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினருக்கு தொடர்ந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய போதை ஒழிப்பு தடுப்பு பிரிவினர் சம்பவதினமான புதன்கிழமை பகல் குறித்த ரயில் தண்டவாளப் பகுதியில் புகைத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உயர்தரத்தில் கல்வி கற்று வரும் மாணவர்களை சுற்றிவளைத்த போது அதில் இருந்து பல மாணவர்கள் தப்பி ஓடியுள்ள நிலையில் 6 மாணவர்களை பிடித்தனர்.

இவர்கள் மாமாங்கம், புன்னைச்சோலை, அதிகாரிவீதி, பார்வீதி போன்ற பகுதிகளில் இருந்து பாடசாலைக்கு செல்வதாகவும் தனியார் வகுப்புக்குச் செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து வீட்டில் இருந்து வெளியேறி கல்வி கற்பதற்கு செல்லாது குறித்த ரயில் தண்டவாளப்பகுதில் ஒன்று கூடி புகைத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் பெற்றோரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து பிள்ளைகள் தொடர்பாக பொற்றோர் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என அறிவுரைகள் கூறி அவர்களை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.