தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தடுப்பூசித் திட்டம்

115518191 gettyimages 1256141792
115518191 gettyimages 1256141792

நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அண்மையில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது. இதன் விளைவாக தடுப்பூசிகளைப் பெறுவதில் தாமதம் இருப்பதால் கொவிட் தடுப்பூசி திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சீரம் நிறுவனத்திடமிருந்து உத்தரவிடப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை இலங்கை உரிய நேரத்தில் பெறும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கடந்த வாரம் உறுதியளித்திருந்தார்.

எனினும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளின் அடுத்த பங்கு உரிய நேரத்தில் வரும் என்று இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு ஒரு உறுதிமொழியைப் பெற முடியவில்லை.

இதன் விளைவாக, தடுப்பூசி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது, மீதமுள்ள பங்குகள் தேவைப்பட்டால் இரண்டாவது டோஸ்ஸிற்காக பயன்படுத்தப்படும்.

உலக சுகாதார ஸ்தாபனம் தடுப்பூசியின் முதல் டோஸ்ஸை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டொஸ்ஸை 12 வாரங்களின் பின்னர் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்து.

இதனிடையே சீனாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட 6 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசியானது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பக கட்டமாக இலங்கையில் உள்ள சீன நாட்டவர்களுக்கு செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.