தமிழர்களின் உரிமை குரலாக ஒலித்த மகானின் குரல் ஓய்ந்து விட்டது – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்

FB IMG 1617436659028
FB IMG 1617436659028

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, கிறிஸ்தவ மதத் தலைவர் ஆயினும் மத எல்லைகளைக் கடந்து மனிதம் என்கின்ற தளத்தில் இயங்கியவர் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஆயரின் மறைவு குறித்து மாணவர் ஒன்றியம் இன்று (சனிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மதம் கடந்த மனித நேய சேவைகளுக்காக அவர், ஈழத் தமிழர்கள் முதல் தமிழ்நாட்டு உறவுகளின் மனங்களிலும் இடம்பிடித்திருந்தார் என ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், போர்க்காலத்தில் மனிதநேயப் பணிகளை முழு வீச்சோடு முன்னெடுத்ததுடன் நீதியோடு கூடிய அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக சம்பத்தப்பட்ட சகல தரப்போடும் பேச்சுவார்த்தைகள், சந்திப்புக்களை அனுசரணை செய்து ஆயர் உழைத்திருந்தார்.

அத்துடன், சர்வதேச தரப்புகளிடமும் தமிழர் தரப்பு நியாயங்களைத் தயங்காது எடுத்துரைத்தவர். குறிப்பாக, போர் மௌனிப்பின் பின்னர் தமிழர் தரப்பில் துணிவோடு குரலெழுப்ப யாருமே இல்லாத நிலையில் நடந்த இனவழிப்பைத் துணிவோடு பேசு பொருளாக்கியவர்.

இந்நிலையில், தமிழர்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்த ஒரு மகானின் குரல் ஓய்ந்து விட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தி நிற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் சமூகம் தமிழ் மக்களுக்கான அவரது இலக்குகள் நிறைவேற தொடர்ந்தும் உழைக்கும்.

இதேவேளை, அன்னாரின் அடக்க நாளாகிய 05.04.2021 திங்கட்கிழமையன்று தமிழர் வாழும் பிரதேசமெங்கும் துக்க நாளாக அனுசரிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ள பல்வேறு தரப்புக்களுடனும் நாமும் இணைந்து கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.