மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் விரைவில் மீட்கப்படுவர்;அமைச்சர் டக்ளஸ் உறுதி!

6eb4a6e0 ad7c 4836 b455 aba38a08b26b
6eb4a6e0 ad7c 4836 b455 aba38a08b26b

இலங்கை கடற்றொழிலாளர்கள் தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளிநாடுகளின் எல்லைப் பாதுகாப்பு தரப்பினரிடம் சிக்கிக் கொள்வார்களாயின் அவர்களை மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் இன்று 05.04.2021 மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு வருகைதந்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த மீனவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

இதனையடுத்து, மியன்மார் தூதரக அதிகாரிகளுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அவர்களின் விடுதலையை விரைவுபடுத்துவது தொடர்பாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோருடன் கலந்துரையாடுவதாகவும் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா அவர்கள் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் உறவினர்களிடம் தெரிவித்தார்.

மேலும் “இலங்கையின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில் பலநாள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்கள் இயற்கை அனர்த்தம் மற்றும் இயந்திரக் கோளாறு போன்ற காரணங்களினால் வெளிநாட்டு எல்லைகளுக்குள் நுழைவார்களாயின் அவர்களை விரைவாக நாட்டுக்கு அழைத்து வரவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எனினும், மியன்மாரில் காணப்படுகின்ற தற்போதைய அரசியல் சூழல் காரணமாக கைது செய்யப்பட்டு இருப்பவர்களை விடுதலை செய்வதில் சில நடைமுறை காலதாமதங்கள் காணப்படுகின்றன” என்று உறுதியளித்தார்.

மியன்மார் கடற்பரப்பில் நுழைந்த குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.