பௌத்த தொல்பொருள் அடையாளங்களே வடக்கு, கிழக்கில் காணப்படுகின்றனவாம் – நாடாளுமன்றில் இப்படிக் கூறினார் விதுர

Rc03896bbe5305e9e89500f1f18ac188c
Rc03896bbe5305e9e89500f1f18ac188c

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவான பௌத்த தொல்பொருள் அடையாளங்களே காணப்படுகின்றன.என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபையில் நேற்று வாய்மூல வினாக்களுக்கான நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் தொல்பொருள் ஆய்வுகள் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இந்த நாட்டின் பெரும்பாலான தொல்பொருள் பகுதிகள் பௌத்த அடையாளங்களைக் கொண்டவை என்பதை மறுக்க முடியாது.

தமிழ் மக்களை இலக்கு வைத்து வடக்கு, கிழக்கில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

தொல்பொருள் ஆய்வுகளை முன்னெடுக்கும் வேளைகளில் பிரதேச செயலகத்துக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ அறிவிக்கப்படுவதில்லை. எவ்வாறு இருப்பினும் வடக்கில் விசேட கவனம் செலுத்தி முன் அறிவிப்பு விடுத்து ஆய்வுகளைச் செய்ய முயற்சிக்கின்றோம்.

இவ்வாறான ஆய்வுகளை முன்னெடுப்பதால் எந்தவொரு சமூகத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படுவதில்லை.

இவை எந்தவொரு மதம் அல்லது இனம் சார்ந்து எடுக்கும் ஆய்வுகள் அல்ல.

ஆனால், தவறான கருத்துக்களை முன்வைத்து, மக்களிடம் முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடாது.

நாட்டின் வரலாற்றை, தொன்மையை ஆய்வு செய்வதில் எந்தவொரு மதத்துடனும் இனத்துடனும் அது நின்றுவிடக்கூடாது. தமிழர்களுக்கும் இதுதான் நாடு. எனவே, சகலரதும் வரலாறுகளை ஆராய்வதே எமது நோக்கம் – என்றார்.