இந்திய மீனவர்கள் விடயத்தில் இலங்கை நிதானமாக செயற்பட வேண்டும்-ஆனந்தசங்கரி

fisher
fisher

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பிலும், கச்சத்தீவு விடயம் தொடர்பிலும் அரசாங்கம் நிதானமாக செயற்பட வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார்.

தமிழர் விடுதலை கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று செவ்வாய்க்கிழமை(05) ஊடக அறிக்கைய ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பிலும், கச்சத்தீவு விடயம் தொடர்பிலும் பல்வேறு தடவைகள் நான் கூறி வந்துள்ளேன். ஆனாலும் குறித்த பிரச்சினை தொடர்பில் இன்றுவரை தீர்வு எட்டப்படாத நிலையே காணப்படுகின்றது.

இந்திய இலங்கை மீனவர்களின் முறுகல் நிலைமைக்குதீர்வு இந்திய மீனவர்களுக்கும் உள்ளுர் மீனவர்களுக்குமிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை இருசாராரும் உணர்ச்சிவசப்படக்கூடிய விடயம் என்பதால் அது சம்மந்தமாக விடப்படுகின்ற அறிக்கைகள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். அத்தகைய அறிக்கைகள் இரு சாராரின் உணர்வுகளை சாந்தப்படுத்தவேண்டுமேயொழிய தூண்டிவிடக் கூடியதொன்றாக இருக்கக்கூடாது.

உள்ளுர் மீனவர்களின் எண்ணிக்கை மிகச்சிறியது. ஆனால் இந்தியமீனவர்களின் எண்ணிக்கையோ மிகவும் அதிகமாகும். ஆகவே உள்ளுர் மீனவர்கள்தான் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கோடு மீன்பிடி அமைச்சர் மெகிந்தஅமரவீர மேற்கொள்ளப்படும் முயற்சி பாராட்டுக்குரியதாகும்.

ஆனால் இந்திய மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் அதிகளவில் கைப்பற்றவேண்டுமென இலங்கை கடற்படையினருக்கு அமைச்சரால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் கடுமையான உத்தரவு என்னை மிகவும் குழப்பமடைய செய்துள்ளது. இந்த அறிக்கை இந்திய தலைவர்களை குழப்பமடைந்து மாற்று நடவடிக்கைக்கு தூண்டும் என்ற ஐயம் எனக்கு எழுகின்றது. அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் தீர்வையொட்டி எந்தவொரு நடவடிக்கையையும் யாராலும் எடுக்க முடியாது.

இந்திய மீனவர்களை கைது செய்து அவர்களுடைய மீன்பிடி உபகரணங்களை கைப்பற்றுவதால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படப்போவதில்லை புத்திசாதுரியமாக இரு சாராரும் செயற்படவேண்டிய காலகட்டம் இதுவாகும். இச்சந்தர்ப்பத்தில் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு ஐந்து மீனவர்கள் இழைத்த குற்றத்துக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த வேளையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு 12-11-2014ம் திகதி எழுதிய கடிதத்தின் சிலபகுதிகளை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

அவற்றை உற்றுப்பார்த்தால் காலத்தின் தேவை என்ன? யாரார் எவ்வாறு செயற்படவேண்டும் என்ற உண்மைகள் தாமாக புலப்படும். ஏனையவை ஒருபுறமிருக்க ,கச்சத்தீவுசம்பந்தமாக எழுதப்பட்டுள்ள பகுதியை ஊன்றிப் படியுங்கள். அன்றைய இலங்கைப் பிரதமர் சிறிமாவோபண்டாரநாயக்கா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கச்சத்தீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டவேளை இந்திய மாநிலங்கள் சிலகுறிப்பாக தமிழ்நாடு பெரும் எதிர்ப்புக் காட்டியது.

கச்சத்தீவுபற்றி ஸ்ரீமதி இந்திராகாந்தி அம்மையார் தெரிவித்ததை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தேன். கச்சத்தீவை விடுதலைப் புலிகள் தமது தளமாக பயன்படுத்த வாய்ப்புண்டு என கவலையுற்றதோடு அதுபின் நாட்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமெனவும் அறிந்திருந்தார். அவ்வாறு ஒருவர் இன்றும் சிந்திப்பதில் தவறில்லை. விசேடமாக எமதுநாடும் சீனாவும் காட்டிவரும் நெருங்கிய உறவும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள உறவில் ஏற்பட்டுள்ள விரிசலுமாகும்.

இந்திய சாணக்கியத்திலும், ஜனநாயகத்திலும் இருந்து நாம் கற்க வேண்டிய பலவிடயங்கள் உண்டு. கச்சத்தீவு சம்பந்தமாக நமது நாடு செய்துகொண்டஒப்பந்தத்தில் இந்திய மீனவருக்கு பலஉரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. இருந்தும் இன்றுகச்சத்தீவு இலங்கையின் ஏகசொத்தாகும். கச்சத்தீவு இன்று ஓர் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. தமிழ்நாட்டு அரசு உட்பட இந்தியாவின் பலமாநிலங்கள் கச்சதீவை இந்திய அரசுமீளப்பெறவேண்டும் எனபெரும் போராட்டங்களை நடத்திவருகின்றன.

இந்தக் கோரிக்கையும் அரசுக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்களும் இந்திய அரசுக்கு மிகசங்கடமானநிலைமையை உருவாக்கியுள்ளது. விடயம் நீதிமன்றம் வரை சென்றுள்ளபோது இந்திய அரசு எதுவித ஆரவாரமுமில்லாமல் கச்சத்தீவை மீளப்பெற்றிருக்க முடியும். இலங்கை அரசுகூட மௌனம் சாதித்திருக்கும். இந்திய அரசு விரும்பியிருந்தால் உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியிருக்கும். ஆனால் பெரும் ஆச்சரியம் என்னவெனில் உயர்நீதிமன்றம் மத்தியஅரசின் அபிப்பிராயத்தை கேட்டபோது அதிர்ச்சிதரக்கூடிய ஆனால் பாராட்டப்பட வேண்டிய பதில் கையளிக்கப்பட்டதுதான்.

கச்சதீவை மீளப்பெறமாட்டோமென நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியதோடு ஒருபடிமேலே சென்று இந்தியமீனவர் அங்கே மீன் பிடிக்கக்கூடாது எனவும் தெரிவித்தது. நான் உங்களை கேட்பது ,இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருந்தால் நாம் என்னசெய்திருப்போம்? என்று ஜனாதிபதி அவர்களே! இந்திய அரசின் முடிவை ஆராய்ந்து பார்ப்பீர்களேயானால் ஒருவிடயம் தெளிவாகின்றது. சரியோபிழையோ ஓர் தலைவி எடுத்த முடிவுக்குமாறாக அவருக்கு அபகீர்த்தி ஏற்படுத்த அரசு விரும்பவில்லை.

அத்தலைவி இறந்து 30 ஆண்டுகள் கடந்தபின்பும் கூட அவரின் கௌரவத்துக்குகளங்கம் ஏற்படுத்த அரசுதயாரில்லை. மிகப்பராட்டுதலுக்குரியவிடயம் யாதெனில் அண்மையில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இந்தவிடயம் முக்கிய இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஓர் பெரும் அரசியல் தலைவர் கூறியதுபோல் தான் விசுவாசமாக நேசிக்கும் சமூகத்திடம் பொய்களைக் கூறி வெற்றி பெறுவதைவிட உண்மையைக் கூறிதோல்வியைத் தழுவுவது மேலானதாகும் என காங்கிரஸ் கூட்டாட்சி எண்ணியது போல் தோன்றுகிறது. இதே கொள்கையைத்தான் நான் 60 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு பிரவேசித்தகாலம் தொட்டு கடைபிடித்து வருகின்றேன்.

மீனவர்கள் பிரச்சினையை இங்குள்ளவர்கள் வீரவசனம் பேசும் அரசியல் பிரச்சனையாக பார்க்கக்கூடாது. இரு நாடுகளின் நட்புக்கு களங்கம் ஏற்படாதவகையில் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கும் நாட்டிற்கும் உண்டு. ஏனெனில் பிரச்சினை பெரிதானால் மிக அதிகளவில் பாதிக்கப்படபோவது நமது உள்ளுர் மீனவர்களே. ஆகவே எவரும் இதனை அரசியல் பிரச்சனையாக பார்த்து இலாபம் தேட முனைய கூடாது. என கடந்த 11.01.2016 அன்று அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன் .

எனவே இன்றைய அரசு இவ்விடயம் தொடர்பில் நிதானமாக அரசு செயற்பட வேண்டும் என்பதை மீண்டும் நான் வலியுறுத்தி கூறுகின்றேன்.என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது