மட்டக்களப்பில் அரச வங்கி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

IMG 0018 1
IMG 0018 1

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் அரச வங்கி உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஒரு மணி நேர பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக ஒன்றுகூடிய இலங்கை வங்கி ஊழியர் சங்க ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது தொடர்பில் பிரதமர் வழங்கிய உறுதிமொழி எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லையெனவும் வங்கி உத்தியோகத்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் வங்கியின் பயிலுனர் ஊழியர்கள் கடந்த மூன்று வருடங்களை கடந்துள்ள போதிலும் இதுவரையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையெனவும் அவர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என பிரதமர் வழங்கிய உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லையெனவும் இதன்போது தெரிவித்தனர்.

ஐந்து வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அவரது செயலாளருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் நிலையில் ஆனால் அரச வங்கிகளில் கடமையாற்றுவோருக்கு ஓய்வூதியம் இல்லாத நிலையுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தெரிவித்தார்.

எந்தவொரு அரச பதவிக்கும் இரண்டு வருடத்திற்கு மேல் பயிற்சிக்காலம் இல்லாதபோது இலங்கை வங்கியில் இறுதியாக இணைத்துக்கொள்ளப்பட்ட வங்கி பயிற்சி ஊழியர்களுக்கு மூன்று வருடமாக்கப்பட்டுள்ளதாகவும் இது ஊழிய வளச்சுரண்டல் எனவும் தனியார் வங்கியை விட அரசாங்கம் மோசமான முறையில் நடந்துகொள்வதாகவும் இதன்போது குற்றஞ்சாட்டப்பட்டது.

மேர்சன்ட் வங்கியில் பண சுரண்டல்,கையாடல்கள் நடைபெற்றுள்ளதாகவும் இவ்வாறு பல விடயங்களை எதிர்த்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்ததாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.