விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு கொடுப்பனவு!

Sagara 4296 1068x712 1 1
Sagara 4296 1068x712 1 1

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு உயிர் வாழும்வரை வழங்கப்படுகின்ற வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்கள் உயிரிழந்த பின்னர் அவர்களை தங்கி வாழ்வோருக்கும் உயிர் வாழும்வரை வழங்குவதற்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று கூடியது.

தற்போதைய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நடைபெறும் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் இதுவாகும்.

குழுவின் தலைமைப் பதவி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு உரித்துடையது என்ற வகையில் ஜனாதிபதி இதில் பங்குபற்றியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்டல், இராணுவ வீரர்களின் வேதனம் போதைப்பொருள் ஒழிப்பு, பாதுகாப்பு அமைச்சுக்குரிய நிறுவனங்களின் வருடாந்த அறிக்கை போன்ற பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

சட்டம், அமைதியை நிலைநாட்டி மேம்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள செயற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி நாட்டின் பல்வேறு பிரதேசங்களின் தேவைக்கேற்ப 196 காவல் நிலையங்களை புதிதாக ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் காவல்துறை சேவையில் மனித வலுவை அதிகரிப்பதற்காக ஆண், பெண் இருபாலாரில் இருந்தும் 10 ஆயிரம் பேரை புதிதாக இணைத்துக்கொள்ளவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அத்துடன் விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு உயிர் வாழும்வரை வழங்கப்படுகின்ற வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்கள் உயிரிழந்த பின்னர் அவர்களிடம் தங்கி வாழ்வோருக்கும் உயிர் வாழும்வரை வழங்குவதற்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை தற்போது அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ வீரர்களின் குடும்பங்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாகக் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அவசியமில்லை என்றும் போராட்டங்களின் பின்னால் இருப்பது வேறு நோக்கங்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.