New update விசேட தேவையுடையோருக்கான காப்பகம் உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை

43d87bcf 7de4 48f5 9010 9855177c00c2
43d87bcf 7de4 48f5 9010 9855177c00c2

இலங்கையில் வாழும் விசேடதேவையுடையோர்கள் அனைவரின் சார்பாகவும் விசேடதேவையுடையோர்கள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும் என்றும், மாதந்தோறும் பெரிதும் பாதிக்கப்பட்டோருக்கு ரூபா10,000 நிதியுதவி வழங்கப்படவேண்டும் என்றும் ,பாதிக்கப்பட்டோர் அமைப்புக்களுக்கு அவை தொடராக இயங்குவதற்கான உதவிகள் வழங்கப்படவேண்டும் என்கின்ற மூன்று கோரிக்கைகளை பாதிக்கப்பட்டோர் சார்பாக மலரும் புத்தாண்டில், நிறைவேற்றித் தருமாறு முன்வைத்துள்ளனர்

அத்தோடு போரின் பின்னரான காலத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்தான கொள்கை உருவாக்கத்தையும் கோருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் இன்று முன்வைத்த கோரிக்கை அறிக்கை வருமாறு ,
போர் ஓய்ந்து 12 வருடங்களை கடக்கின்றோம். போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றைய மாகாணங்களிலும் பார்க்க அதிகம்.

பாதிக்கப்பட்டோரின் வாழ்வில் அவர்களின் வலியை ஆற்றுவதற்கும், அவர்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதற்கும் இலங்கை அரசும், மாகாண அரசுகளும், தொண்டு நிறுவனங்களும், உறவுகளும் ஆற்றிவரும் சேவைகளை நாம் நன்றியோடு நினைவு கூறுகின்றோம். இருந்த போதும் எமது தேவைகளில் பல இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது என்பதை நாம் எமது உறவுகளின் முன் சொல்ல வேண்டியுள்ளதால் இன்று இந்த அறிக்கையை வெளியிடுகின்றோம்.

  1. மாவட்டம் தோறும் விசேடதேவையுடையோர்கள் காப்பகம்

விசேடதேவையுடையோர்கள் தங்குவதற்கான வசதிகளுடன் கூடிய காப்பகங்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும் என்பது எமது நீண்டகால தேவையாக உள்ளது. இன்னொருவரில் முழுமையாக தங்கி வாழ்பவர்கள் பல சந்தர்ப்பங்களில் தமக்கான ஒரு காப்பகங்கள் இல்லை என்று ஏங்குகின்றார்கள். அவ்வாறான காப்பகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும் என கோருகின்றோம்.

2.மாதம் தோறும் பெரிதும் பாதிக்கப்பட்டோருக்கு ரூபா10,000 நிதியுதவி

இன்னொருவரில் பெரிதும் தங்கி வாழ்பவர்களுக்கு குறைந்த பட்சம் ரூபா 10,000 மாதாந்த உதவித் தொகையாக கொடுக்கப்பட வேண்டுமென்று கோருகின்றோம்.
உதாரணமாக,

  1. முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள்
  2. இரண்டு கரங்களையும் இழந்தவர்கள்
  3. பல அங்கங்களை இழந்தவர்கள்
  4. இரண்டு கண்களையும் இழந்தவர்கள்
  5. இரண்டு கால்களையும் முற்றாக இழந்தவர்கள்.
  6. முதுமையில் அநாதைகள் ஆக்கப்பட்டவர்கள்
  7. பாதிக்கப்பட்டோர் அமைப்புக்களுக்கு இயங்குவதற்கான உதவிகள்

கிராமங்களை மையப்படுத்தி இயங்கி வரும் பாதிக்கப்பட்டோர் அமைப்புகளுக்கு, அவை தொடர்ச்சியாக இயங்குவதற்கு பல்வேறு உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.என தமிழ் விசேடதேவையுடையோர்கள் அமைப்பினர்(DATA) தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கோரிக்கைகளை புத்தாண்டுக்கு முன்னர் நிறைவேற்றித் தருமாறு அவர்கள் வினயமான கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.