புத்தாண்டில் 24 மணி நேர விசேட கண்காணிப்பு!

WipeOut49 26 2021 024924.745000
WipeOut49 26 2021 024924.745000

தமிழ் – சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 24 மணித்தியாலமும் காவற்துறையினர் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் , வாகன விபத்துகளை தடுப்பதற்காக போக்குவரத்து செயற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்புக்கு இன்னும் ஒரு நாள் இடைவெளியே உள்ளது. 

இந்நிலையில் இந்த காலப்பகுதியில் கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும் , வாகன விபத்துகளை தவிர்ப்பதற்காகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

24 மணித்தியாலமும் இடம்பெறும் இந்த சோதனை நடவடிக்கைகளில் காவற்துறையினர் சீருடையிலும் , சிவில் உடையிலும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதுடன் , தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நிறுவனங்கள் , வர்த்தக நிலையங்கள் என்பன தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளன. 

தற்போது செயற்பட்டு வரும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் தங்களது கைகளை சுத்தம் செய்துக் கொள்வதற்கான வசதிகளை செய்துக் கொடுத்திருப்பதுடன் , அவர்களது உடல் வெப்பத்தை அளவிடுவதற்காகவும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருக்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை ,சித்திரைப்புத்தாண்டு காலப்பகுதியில் அதிகளவாக வாகன விபத்துகள் பதிவாகிவருகின்றமையினால் , அவற்றை தடுப்பதற்காகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதற்கமைய பொதுவாகனங்களின் சாரதிகளை கண்காணிப்பதற்காக சிவில் உடையில் காவற்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதன்போது மதுபானம் அருந்தியும் , போதைப் பொருட்களை பயன்படுத்தியும் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

காவற்துறை போக்குவரத்து பிரிவினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து முன்னெடுக்கும் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும். 

வாகன விபத்துகளினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்துக் கொள்ளும் நோக்கத்திலேயே இத்தகைய சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன