11 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா வழங்கப்பட்டது-செஹான் சேமசிங்க

1530359860 shehan semasinghe 5
1530359860 shehan semasinghe 5

சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கான 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு இன்றைய தினமும் வழங்கப்படவுள்ளது.

குறித்த பணிகள் நேற்றைய தினம் ஆரம்பமாகியிருந்தன.

இதற்கமைய, 11 இலட்சம் குடும்பங்களுக்கு நேற்றைய தினம் 5,000 ரூபா புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

எனினும், குறித்த நிவாரண கொடுப்பனவை கொடுப்பதற்கு கையிருப்பில் இருந்த நிதிப்பற்றாக்குறை மற்றும் அதனை விநியோகிக்கும் அதிகாரிகளின் தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்காமை உள்ளிட்ட காரணிகளால் நேற்று பல்வேறு இடங்களில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இன்றைய தினமும் 5,000 ரூபா புத்தாண்டு நிவாரண கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

கொவிட் 19 காரணமாக இறுதியாக 5,000 ரூபாவுக்கு தகுதிபெற்ற குடும்பங்களின் 10 வகைகளில் இருந்து 7 வகையான பயனாளிகளை கொண்ட குடும்பங்கள் இந்த 5,000 ரூபாவை பெற்றுக்கொள்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், சமுர்த்தி பெறுவோர், குறைந்த வருமானம் கொண்டோர் மற்றும் முதியோர் கொடுப்பனவு பெறும் நபர்களை கொண்ட குடும்பங்கள் இந்த 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவை பெறும் குடும்பங்களாக தகுதி பெறுகின்றன.

அத்துடன், விசேட தேவையுடையோர், நீரிழிவு நோய்க்கான கொடுப்பனவு பெறுவோர் மற்றும் மேன்முறையீடு செய்து தகுதி பெறும் குடும்பங்களை சார்ந்தோருக்கு குறித்த 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், இவற்றில் ஏதேனும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தகுதிகளை கொண்ட நபர்கள் ஒரே குடும்பத்தில் இருப்பார்களாயின் அந்த குடும்பத்திற்கு ஒரு 5,000 ரூபா மாத்திரமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.