இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் பள்ளிவாசல் பதவிகளில் இருந்தால் விலகவும்! – வக்பு சபை அறிவிப்பு

download 3 8
download 3 8

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் பள்ளிவாசல் பதவிகளில் இருந்தால் உடனடியாக விலகுமாறு வக்பு சபை அறிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற வக்பு சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என முஸ்லிம் மத விவகாரங்கள் துறை இயக்குநர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிரவாதத்துடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளைத் தடைசெய்து விசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டிருந்தார்.

அதன்படி ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் இமாஅத், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், ஜம்இய்யதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹம்மதியா, தாருல் அதர் அல்லது ஜாமிஉல் அதர், ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம், ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கைதா, சேவ் த பேர்ல்ஸ், சுபர் முஸ்லிம் ஆகிய அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வர்த்தமானி அறிவிப்பின்படி தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு தலைமைத்துவம் வழங்குவது, உறுப்பினராக இருப்பது, அமைப்புடன் தொடர்புடைய உடை – சின்னங்களை அணிவது, கூட்டங்களை நடத்துவது, ஊக்குவிப்பது, தகவல்களை வெளியிடுவது போன்ற நடவடிக்கைகள் தண்டனைக்குரிய குற்றமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே வக்பு சபை மேற்படி அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது.