அடுத்த வருடம் ஆரம்பத்திலேயே மாகாண சபைத் தேர்தல்

Vote 2
Vote 2

மாகாண சபைகளுக்கான தேர்தல் இவ்வருடத்துக்குள் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என அரச உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தேர்தல் முறைமை தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய யோசனைக்கு பங்காளிக் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இவ்விவகாரம் உட்பட மேலும் சில விடயங்களாலேயே மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம் இடம்பெறாது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தொகுதி மற்றும் விகிதாசாதார அடிப்படையில் (70 இற்கு 30) மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் தொகுதியொன்றுக்கு ஒரு கட்சி மூன்று வேட்பாளர்களை நிறுத்த முடியும் எனவும், மாவட்ட மட்டத்தில் இரு போனஸ் ஆசனங்களை வழங்க வேண்டும் என்ற யோசனையும் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றது. எனினும், இந்தக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில், அடுத்த வருடம் ஆரம்பத்திலேயே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று அரச வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன” – என்றுள்ளது.