சவுதி சிறைகளிலுள்ள இலங்கை பெண்களை அழைத்துவர நடவடிக்கை!

download 1 20
download 1 20

சவுதி அரேபியாவின் சிறைகளிலும், தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்ட இலங்கை பெண்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் சவுதி அரசாங்கங்களுக்கிடையேயான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இலங்கை பெண்களை சிறைகளில் விடுவித்து அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப சவுதி அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்படி சவுதி எயர்லைன்ஸ் மூலம் அவர்களை இலங்கைக்கு அனுப்ப சவுதி அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

அதேநேரம் இலங்கையில் சவுதி அரேபிய விமானம் தரையிறங்க அனுமதிக்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா மற்றும் விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறினார்.

இதேவேளை சர்வதேச மன்னிப்புச் சபை கடந்த வாரம் குறைந்தது 41 இலங்கை பெண்கள், சவுதி அரேபியாவில் உள்ள நாடுகடத்தல் மையத்தில் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டு, தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்திருக்கிறார்கள் என கூறியது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாக சவுதி அரேபியாவுக்கு சென்றவர்கள் ஆவர்.