சிம்ம சொப்பனமாக திகழும் திமுத் – தனஞ்சயவின் இணைப்பாட்டம்!

1619262959 dimuth 02
1619262959 dimuth 02

பங்களாதேஷ் – இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இறுநாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் முதல் இன்னிங்ஸ் ஆட்டமானது இன்னும் தொடர்ந்த வகையிலே உள்ளது.

சுற்றுலா பங்களாதேஷுக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, ஏப்ரல் 21 கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணியானது முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி அந்த அணியின் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மோமினுல் ஹக் ஆகியோரின் இரு சதங்களுடன் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது மொத்தமாக 173 ஓவர்களை எதிர்கொண்டு, 7 விக்கெட் இழப்புக்கு 541 ஓட்டங்களை பெற்று டிக்லே செய்தது.

அணி சார்பில் அதிகபடியாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 163 ஓட்டங்களையும், மோமினுல் ஹக் 127 ஓட்டங்களையும், தமிம் இக்பால் 90 ஓட்டங்களையும், முஷ்பிகுர் ரஹீம் 68 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 50 ஓட்டங்களையும் எடுத்தனர்.

அதன் பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது மூன்று விக்கெட்டுகளை 190 ஓட்டங்களுக்கு இழந்தபோதிலும், நான்காவது விக்கெட்டுக்காக கைகோர்த்த அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் தனஞ்சய டிசில்வா ஆகியோரின் இணைப்பாட்டத்தை பிரிப்பது என்பது பங்களாதேஷுக்கு சிம்ம சொப்பனமாகவுள்ளது.

நேற்றைய நான்காம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக முன்னதாகவே நிறைவுக்குவர இலங்கை அணியானது மொத்தமாக 149 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்புக்கு 512 ஓட்டங்களை குவித்திருந்தது. அதில் நான்காவது விக்கெட்டுக்கான இவர்களின் இணைப்பாட்டம் மாத்திரம் 322 ஓட்டங்களை பெற்றுள்ளது.

திமுத் கருணாரத்ன மொத்தமாக 419 பந்துகளை எதிர்கொண்டு 25 பவுண்டரிகள் அடங்கலாக 234 ஓட்டங்களையும், தனஞ்சய டிசில்வா 278 பந்துகளில் 20 பவுண்டரிகள் அடங்கலாக 154 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

பல்லேகல மைதானத்தில் ஒரு வீரர் இரட்டை சதம் அடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அதேநேரம் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார 2014 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக காலியில் இரட்டை சதம் அடித்ததற்கு பின்னர் ஒரு இரட்டை சதத்தை திமுத் கருணாரத்ன இலங்கை அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளார்.

திமுத்துக்கு பெரும் உதவியாக இருந்த தனஞ்சய டி சில்வா, நேற்று தனது டெஸ்ட் வாழ்க்கையின் ஏழாவது சதத்தை அடித்தார்.

எவ்வாறெனினும் போட்டியின் ஐந்தாவதும், இறுதி நாளான இன்று பங்களாதேஷின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட இலக்கை சமப்படுத்துவதற்கு இலங்கை அணிக்கு இன்னும் 29 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் உள்ளது.