சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமையால் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நடவடிக்கை!

79491998 f9cb7a21 mask 850x460 acf cropped
79491998 f9cb7a21 mask 850x460 acf cropped

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த் திருவிழாவில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது பக்தர்கள் நடந்து கொண்டமையால் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் கலந்துகொண்ட மக்கள் எனப் பலர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஆலயங்களின் திருவிழாக்கள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கும் பெரும்பாலானவர்கள் உரிய முறையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை எனக் கூறப்படுகின்றது. அதனால் கொரோனாத் தொற்று அதிகளவில் மக்கள் மத்தியில் ஊடுருவும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்களில் சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படாமை கவலையளிக்கிறது என யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

வழிபாட்டு இடங்களில் 50 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் யாழ். மாவட்டத்தில் வழிபாட்டு இடங்களில் இந்த நடைமுறையைப் பொதுமக்கள் அனுசரித்துச் செல்லவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை ஆலய பரிபாலன சபையினர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் கண்காணித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், வழிபாட்டு இடங்களில் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது எனவும் யாழ். மாவட்ட அரச அதிபர் மேலும் கூறினார்.