மட்டு வைத்தியசாலையில் சினோபாம் தடுப்பூசி மருந்தை வீணாக்கியதற்கு விசாரணை

download 7
download 7

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 600 பேருக்கு ஏற்றக்கூடிய 2ம் கட்ட கொவிட் தடுப்பூசியான சினோபாம் தடுப்பூசி மருந்தை அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் வீணாகிப்போன சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த இரண்டாம் கட்ட தடுப்பூசி வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உத்தியோகத்தர்களுக்கு ஏற்றும் நடவடிக்கை சனிக்கிழமை (01) இடம்பெற்றது இதன் பின்னர் மாலை 5 மணிக்கு 57 மருந்து நிரப்பப்பட்ட மருந்து குப்பிகள் குளிர்சானப்பெட்டியில் வைக்காமல் வெளியில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இதன் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் அப்பகுதிக்கு மீண்டும் ஏனையோருக்கு தடுப்பூசி எற்றுவதற்கு வந்தபோது 4 பாகை தொடக்கம் 8 பாகை குளிர்தானப் பெட்டியில் வைக்கப்படவேண்டிய தடுப்பூசி மருந்தை கிட்டத்தட்ட 15 மணித்தியாலங்களுக்கு மேல் வெளியில் வைக்கப்பட்டுள்ளதை கண்டனர். இதனால் இந்த தடுப்பூசி மருந்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த இந்த தடுப்பூசி ஒரு மருந்து குப்பியில் உள்ள மருந்து 10 பேருக்கு ஏற்றக் கூடியதாகவும். சுமார் 600 பேருக்கு ஏற்றக்கூடிய 57 மருந்து குப்பிகள் அசமந்தப் போக்கினால் வீணாகிப் போயுள்ளதாகவும். இது தொடர்பான விசாரணைகளை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது அதிக தேவையுள்ள இந்த தடுப்பூசி மருந்தை அதிகாரிகளின் அசமந்தப்போக்கினால் வீணாகிப்போயுள்ளது குறிப்பிடத்தக்கது.