ஒரு நாடு இரு தேசம்-வெளிநாடுகள் அழுத்தம் கொடுக்க கூடாது

gota3
gota3

உலகின் ஏனைய நாடுகளுடன் நட்பை எதிர்பார்க்கும் அதேவேளை, அவர்கள் எம் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதை நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜப்பான் வௌிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை என்பன பிராந்திய ஒத்துழைப்பில் முக்கிய பங்கு வகிப்பதாக, ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திர வலயம் நெருக்கடிகளற்ற அமைதியான பிராந்தியமாகக் காணப்பட வேண்டுமெனவும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்காகவும் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையை சூழவுள்ள கடற்பிராந்தியம் இலங்கைக்கே உரித்தானது என்பதை மறந்து பல வருடங்களாக இந்து – பசுபிக் கடற்பிராந்தியம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருவதனை ஏற்க முடியாது எனவும் இலங்கையின் நிலப்பரப்பை விட 9 மடங்கு அதிகமான அந்தப் பகுதி இலங்கை கடற்பரப்பென அழைக்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச சட்டத்திற்கமைய, இந்த கடற்பரப்பு இலங்கையின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாடு இரு தேசம் எனும் எண்ணக்கருவை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு பலம் வாய்ந்த நாடுகள் அழுத்தம் பிரயோகிக்கக்கூடாது எனவும் இதன் போது தெரிவித்திருந்தார்.