நல்லூர் பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றம்

nallur
nallur

நல்லூர் பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் எதிர்ப்புக்களின் மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கான விசேட அமர்வு தவிசாளர் த.தியாகமூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது.

அடுத்தாண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் பல திருத்தங்கள்
செய்யப்பட்டு சபையின் அங்கீகாரத்திற்கு விடப்பட்டது.

திருத்தியமைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தினை தங்களால் வாசித்து விளங்கிக்கொள்ள முடியவில்லை எனவும், பல குறைகள் இருப்பதாகவும் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் எதிர்ப்பின் மத்தியில் தவிசாளரினால் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இதன் போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஈ.பி.டி.பியும்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட்டாக இணைந்து எதிர்த்தன. எனினும் சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுயேட்சைக்குழு ஆகியன ஆதரவாக வாக்களித்தன.

இதேவேளை நல்லூர் பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 6 ஆம் திகதி நடைபெற்றபோது சபை உறுப்பினர்களில் இரு வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.

அந்தவகையில் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 7 உறுப்பினர்களும் 9 உறுப்பினர்கள் எதிராகவும் 2 உறுப்பினர்கள் நடுநிலையும் வகித்தனர். மேலும் சபையினை ஆட்சி செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உட்பட இரண்டு உறுப்பினர்கள் சபைக்கு வந்திருக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் திருத்தங்களுடன் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.