அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது

download 1 10
download 1 10

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி அழைப்பதற்கு கொழும்பு மேல்நீதிமன்றின் மூவரடங்கிய நிரந்தர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை மத்திய வங்கியின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பிணை முறி ஏலத்தில், 688 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பிணைமுறிகளை போலியாக பரிமாற்றியதாக குற்றம் சுமத்தி குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொடவத்த மற்றும் நாமல் பலேல்ல ஆகிய மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் இன்று (05) அழைக்கப்படவிருந்தது.

எனினும் தற்போதைய கொவிட்-19 பரவல் காரணமாக நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு ஊடாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரையில் பிற்போடுவதற்கு நீதிபதிகள் ஆயம் தீர்மானித்துள்ளதாக நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.