கொரோனாவை ஒழிக்க ஆளும், எதிர் தரப்பு இணைய வேண்டும்-அத்துரலிய ரத்ன தேரர்

download 1 13
download 1 13

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை வெற்றிக் கொள்ள ஆளும் தரப்பினரும், எதிர் தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய நெருக்கடியான நிலைக்கு தீர்வு காண முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

ராஜகிரியவில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது. இந்திய நாட்டில் கொவிட் தாக்கத்தினால் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கைக்கும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை வெற்றிக் கொள்ள ஆளும் தரப்பினரும், எதிர் தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். ஆனால் இரு தரப்பினரும் பொறுப்புடன் செயற்படாமல் ஒரு தரப்பினர் பிறிதொரு தரப்பினரை தூற்றிக் கொள்கிறார்கள்.

அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கொவிட்-19 தாக்கத்தையும், அதனால் ஏற்பட்டுள்ள சவால்களையும் வெற்றிக் கொள்ள முடியாது. சுகாதார காரணிகளை முன்னிலைப்படுத்தி செயற்படுதல் அவசியமாகும். சுகாதார தரப்பினரது செயற்பாடுகளுக்கு அரசியல்வாதிகள் இடையூறு விளைவிப்பதாக அறிய முடிகிறது. இவ்வாறானவர்கள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை குறித்து அவதானம் செலுத்தாது நாடாளுமன்றில் தேவையற்ற வாத பிரதிவாதங்கள் இடம்பெறுவது கவலைக்குரியது. ஆளும் தரப்பினரும், எதிர்தரப்பினரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும் என்றார்.