முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முடியாது

amal0
amal0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து கொண்டு கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தலாம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு நினைத்தால் அது பகல் கனவு. இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தமிழர்களின் எதிரிகளாகவும் விரோதிகளாகவுமே செயற்படுகின்றனர் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் குறித்த நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினர் தந்திரமாகவும் இராஜதந்திரமாகவும் காய்களை நகர்த்துபவர்கள். அவர்கள் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த உதவுவார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பகல் கனவு காணக்கூடாது.

அவர்கள் உங்களுடன் சுமூகமான உறவை,விட்டுக்கொடுக்கும் உறவை கொண்டிருப்பார்களேயானால் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த தமது இணக்கத்தை வெளிப்படுத்திக்காட்டட்டும் பார்க்கலாம் என சவால் விடுக்கின்றேன்.

கிழக்கில் நாம் முஸ்லிம் மக்களுக்கு பல விட்டுக்கொடுப்புக்களை செய்துள்ளோம். அக்கரைப்பற்று பிரதேச சபை ஒரே நாளில் மாநகரசபையானது.

மட்டக்களப்பில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் கல்வி வலயம் உருவானது. அம்பாறைக்கு தனி ஆர்.டி.எஸ். அலுவலகம் உருவானது. இப்படி எத்தனையோ விடயங்களை நாம் விட்டுக்கொடுத்து வந்தோம். ஆனால் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினர் கல்முனை தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிரியாகவும் விரோதியாகவுமே செயற்படுகின்றனர்.

அதிலும் ஹரிஷ் எம்.பி. அப்பட்டமாக தமிழர் விரோதியாக செயற்படுகின்றார். சாணக்கியன் எம்.பி. செவ்வாய்க்கிழமை இங்கு என்னைப்பற்றி சில விடயங்கள் கூறினார்.

அவர் நாடாளுமன்றத்துக்கு புதியவர். அவர் 4 ஆர்ப்பாட்டங்கள் செய்திருந்தால் நான் 40 ஆர்ப்பாட்டங்கள் செய்தவன். அவர் போகப்போக புரிந்து கொள்வார். இங்கு முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யும் உள்ளார்.இந்த விடயத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் தடையாக இருக்கக்கூடாது என அவரும் எடுத்துக்கூற வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்த முஜிபுர் ரஹ்மான் ,முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் எல்லாம் உங்கள் அரசோடுதான் இருக்கின்றனர். அவர்களுடன் நீங்க பேச முடியும் தானே எனக்கேட்டார்.

இதனையடுத்து எழுந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் , இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் முயற்சியை பாராட்டுகின்றேன்.அவர் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் இன்னும் முனைப்பாக செயற்பட வேண்டும் என கோருகின்றேன்.

அதற்கு எமது ஆதரவை வழங்குவோம் என்றார்.அப்போது மீண்டும் எழுந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன். செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.க்கு நன்றி. அவர் போன்று முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யும் இவ்விடயத்தில் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.