ஜனாதிபதி கொரோனாவுக்கு முகம்கொடுக்க தேசிய சபையை அமைக்கவில்லை – ரவூப் ஹக்கீம்

1592202463rauf
1592202463rauf

தேசிய அனர்த்தம் ஒன்று ஏற்பட்டிருக்கும்போது அதற்கு முகம்கொடுக்க தேவையான தேசிய சபையை அமைக்கும் பொறுப்பை ஜனாதிபதி தட்டிக்கழித்திருக்கின்றார்.

அதனால் நாடு எதிர்கொண்டுள்ள அனர்த்த நிலைமைக்கு அனைவரும் இணைந்து தீர்வுகாண தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையை விரைவாக அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் சுகாதார பாதிப்பு ஏற்படும்போது அதனை கட்டுப்படுத்த சட்டமூலம் ஒன்று இல்லை என்ற குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் இருக்கும் சட்டத்தையேனும் பின்பற்றி நடவடிக்கை எடுக்க அரசாங்கத்துக்கு முடியாமல்போயிருக்கின்றது.

சிறிலங்கா அனர்த்த முகாமைத்துவ சட்டம் தற்போதும் அமுலில் இருக்கின்றது. அந்த சட்டத்தினை தற்போது அமுல்படுத்தலாம். நாட்டில் தேசிய பேரழிவொன்று இருக்கும்போது, அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க தேசிய சபை ஒன்றை ஜனாதிபதிக்கு அமைக்க முடியும். ஆனால் அந்த நடவடிக்கையை ஜனாதிபதி தட்டிக்கழித்திருக்கின்றார்.

மேலும் நாடு எதிர்கொள்ளும் பேரழிவின்போது இந்த சட்டத்தின் அடிப்படையில் தேசிய சபை ஒன்றை ஏற்படுத்துவது ஜனாதிபதியின் கடமை. அந்த சபையில் எதிர்க்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் உள்ளடங்குகின்றனர்.

ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என இரண்டு தரப்பினரும் இணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை தேடிக்கொள்வதற்கான சபையாகும். இந்த சபையை இன்னும் அமைக்காமல் இருப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும்.

அத்துடன் தேசிய பேரழிவு தொடர்பான சபை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடுவது கட்டாயமாகும். அப்படி இருந்தும் இந்த தேசிய சபை இதுவரை அமைக்கப்படாமல் இருப்பது கவலையளிக்கின்றது. அதனால் விரைவாக இந்த சபையை அமைத்து, எதிர்க்கட்சியினரையும் இணைத்துக்கொண்டு இந்த கொவிட் பிரச்சினைக்கு முகம்கொடுக்கவேண்டும்.

அத்துடன் கொவிட் நிலைமையை பயன்படுத்திக்கொண்டு மத வேறுபாட்டை ஏற்படுத்த முற்படுவதாக அரச தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். அரச பலத்தை பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம் மக்கள் வாய்திறக்க முடியாதவகையில், குறிப்பாக அக்குரணை, அட்டுளுகம போன்ற முஸ்லிம்கள் பரவலாக வாழும் பிரதேசங்கள் மாதக்கணக்கில் முடக்கிவைக்கப்பட்டிருந்தன.

சில வங்குராேத்து ஊடகங்களும் இதனை தொடர்ந்து காண்பித்து, முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில்தான் கொவிட் பரவுவதான பிரசாரத்தை மேற்கொண்டுவந்ததையும் நாங்கள் கண்டோம்.

அரசாங்கம் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக முற்றாக அழிக்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு பதிலாக, பிரதான துராேகியாக முஸ்லிம் மக்களை ஏற்படுத்திக்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ளும் அரசாங்கமாகவே இந்த அரசாங்கத்தை நாங்கள் காண்கின்றோம்.

அதனடிப்படையிலேயே கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய முழு உலக நாடுகளும் அனுமதித்திருந்த நிலையில், முஸ்லிம்களை பழிவாங்கும் வகையில் இலங்கையில் மாத்திரம் எரிப்பதற்கு மாத்திரம் அனுமதித்திருந்தது.

இறுதியில் ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள, அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே, அடக்கம் செய்ய அனுமதி வழங்கவேண்டி ஏற்பட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்றார்.