மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை: 5,787 கொரோனா நோயாளிகள் இன்னமும் வீடுகளில்!

families are restricted from visiting hospitalized loved ones what does this mean for at home care LEAD 1
families are restricted from visiting hospitalized loved ones what does this mean for at home care LEAD 1

இலங்கையில் கொரோனா சிகிச்சை நிலையங்கள் அல்லது மருத்துவமனைகளில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்னமும் தங்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனர் என்று ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தகவல்படி, தற்போது நாட்டில் மொத்தம் 18 ஆயிரத்து 830 கொரோனா தொற்றாளர்கள் இருக்கின்றனர்.

அவர்களில் 13 ஆயிரத்து 43 பேர் மட்டுமே அரசின் கொரோனா சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 5 ஆயிரத்து 787 கொரோனாத் தொற்றாளர்கள் இன்னும் மருத்துவமனைகள் அல்லது கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றப்படவில்லை என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 4 ஆயிரத்து 906 நோயாளர்கள் அரசின் 43 மருத்துவமனைகளிலும், 6 ஆயிரத்து 51 நோயாளிகள் கொரோனா சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 2 ஆயிரத்து 86 நோயாளிகள் 13 தனியார் சிகிச்சை நிலையங்களிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2 ஆயிரத்து 500 படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்று இராணுவத்தின் பங்களிப்புடன் தயார்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் 5 ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையம் எதிர்வரும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் பூர்த்தியாகும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.