மைலோ குளிர் பாலில் கொக்கைன் போதைப்பொருள் கலந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் கைது!

1bd2e415 53c4 488a 8f05 9452c5b41ccb 1
1bd2e415 53c4 488a 8f05 9452c5b41ccb 1

மைலோ குளிர் பாலில் கொக்கைன் போதைப்பொருள் கலந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த புத்தூர் வாசி காவற்துறை புலனாய்வுப் பிரிவினரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.

மானிப்பாயில் சில நாள்களுக்கு முன்பு சலவைத் தொழிலகம் ஒன்றில் உரிமையாளருக்கு மைலோ பால் வழங்கி அவரை மயக்கி 2 பவுண் நகையைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது.


அத்துடன், மானிப்பாயில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை வாடகைக்கு அமர்த்தி கைதடிக்கு சென்ற ஒருவர்  மைலோ பால் பைக்கற்றை வழங்கியுள்ளார். 

பைக்கெற்றின் வாய் பகுதியை வெட்டி வழங்கியதால் முச்சக்கர வண்டிச் சாரதி அதனை ஏற்க மறுத்த போது, ஸ்ரோ இல்லாததால் அவ்வாறு செய்யதாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் சாரதி அதனைப் பருகிய நிலையில் மயக்கமடைந்துள்ளார்.

அதன்போது முச்சக்கர வண்டி சாரதி அணிந்திருந்த மோதிரம் உள்பட 2 தங்கப் பவுண் நகையை கொள்ளையிட்டு அந்த நபர் தப்பித்துள்ளார். 

அத்துடன் முச்சக்கர வண்டி சாரதியின் கழுத்தில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில் கைதடியைச் சேர்ந்தவர்களால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். 
இந்தச் சம்பவம் தொடர்பிலும் வைத்தியசாலை காவற்துறையினர் ஊடாக மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் மூத்த காவற்துறை அத்தியட்சகர் லியனகேவினால் காவற்துறைபுலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியிடம் வழங்கப்பட்டது.


சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களில் சிசிரிவி பதிவைப் பெற்ற யாழ்ப்பாணம் காவற்துறை புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு புத்தூரைச் சேர்ந்த ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்து மானிப்பாய் காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டார். 

சந்தேக நபரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில் தான் கொக்கைன் போதைப்பொருளை மைலோ பாலில் கலந்து வழங்கி  கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் மானிப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நாளை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.