ரமழானிற்கு வீடுகளிலிருந்தவாறு பிரார்த்தியுங்கள் – வைத்தியர் சஞ்சீவ

download 2 9
download 2 9

புனித ரமழான் மாதத்தின் இறுதித்தினங்கள் இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமானவை என்றபோதிலும், கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக வீடுகளிலிருந்தவாறு தொழுகைகளையும் பிரார்த்தனைகளையும் மேற்கொள்வது அனைவருக்கும் பாதுகாப்பானதாக அமையும் என்று அக்குறணை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிறுக்கிழமை காணொளியொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் கூறியிருப்பதாவது :

இஸ்லாமியர்களுக்கு மிகமுக்கிய தினமான ரமழான் பண்டிகைக்கு இன்னும் சிலநாட்களே இருக்கின்றன. ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அக்குறணை மக்களை அதிலிருந்து பாதுகாக்கவேண்டும் என்று நினைக்கின்றேன்.

ரமழான் மாதத்தின் இறுதித்தினங்கள் இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமானவையாகும். இதன்மூலம் அடைந்துகொள்ளக்கூடிய நன்மையை நீங்கள் அனைவரும் (இஸ்லாமியர்கள்) அடையவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். இதற்காக நீங்கள் தொழுகையில் ஈடுபடவேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்காகக் கடந்த காலங்களில் நீங்கள் பள்ளிவாசலுக்கு வருகை தந்தீர்கள். எனினும் இம்முறை அதனை உங்களுடைய வீடுகளில் இருந்தவாறே செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோன்று இந்தக் காலம் உங்களுடைய பிரார்த்தனைகளை இறைவன் செவிமடுக்கும் காலம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே இந்தக் கொடிய தொற்றுநோய்ப்பரவலில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும்படி இறைவனிடம் பிரார்த்திக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், பிறருக்குத் தீங்கிழைக்காமல் வாழவேண்டும் என்று புனித குர்-ஆனில் கூறப்பட்டுள்ளது. ஒரு மனிதனின் வாழ்வை நாசப்படுத்துவதென்பது ஒட்டுமொத்த மனித குலத்தின் வாழ்வையும் அழிப்பதற்கு ஒப்பானதாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே உண்மையான முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் இந்த ரமழான் மாதத்தில் ஏனையோருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்றவகையில் என்னுடன் ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்புவிடுக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.