நினைவிடத்தை அழிக்கலாம் நினைவுகளை அழிக்க முடியாது- யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

ecc647ac 68eb3b42 jaffna university students union 850x460 acf cropped
ecc647ac 68eb3b42 jaffna university students union 850x460 acf cropped

இவ்வாண்டு மே 18 தமிழினப் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளாகும் .தமிழ் மக்களை கொடூரமாக அழித்ததோடல்லாமல் நமது நினைவையும் அடக்கும் ஒரு மோசமான அரசின் ஆட்சியில் இந்த நினைவு கூறலை நாங்கள் எதிர்கொள்கின்றோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எமது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை திட்டமிட்டு அழித்த அரசு எமது மாணவரின் போராட்டத்தின் காரணமாக அதனை மீள அமைக்க வழி விட்டது. இப்போது வருடாவருடம் எமது மக்கள் பொங்கும் உணர்வுகளோடு வந்து அழுது ஆறிச்செல்லும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் தூபியை மிலேச்சத்தனமாக அழித்ததோடு நினைவுகளையும் வஞ்சகமாக கவர்ந்து சென்று அடைந்துள்ளது.

மேலும் கொரோனாவைக் காரணம் காட்டி முல்லைத்தீவு பகுதியை முடக்கி நாம் எந்த விதத்திலும் முள்ளிவாய்க்காலை அணுக முடியாதபடி தடுத்துள்ளது . இவர்களது இழி செயலுக்கு வரலாறு பதில் சொல்லும் .ஆகவே மக்கள் இவ்வாண்டு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் மூடப்பட்டது என்றால் நாங்கள் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கேட்டுக்கொண்டபடி மாலை 6 மணிக்கு ஆலயங்களில் மணியொலி எழுப்புவோம். எமது வீட்டு முற்றங்களில் நினைவுச் சுடர் ஏற்றுவோம் .இல்லங்களில் ஒரு வேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து உண்போம்.அந்த வேளையில் எமது எதிர்கால சந்ததியினருக்கு இனப் படுகொலையின் உண்மையை எடுத்து விளக்குவோம் .நினைவிடத்தை அழிக்கலாம் நினைவுகளை அழிக்க முடியாது என்பதை உரத்துச் சொல்வோம் .