12 ஆண்டாகியும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதியில்லை-த. கலையரசன்

FB IMG 1621321610731 1
FB IMG 1621321610731 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை ஒரு வருடத்திற்குள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது ஆனால் முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று 12 வருடங்கள் கடந்தும் நீதியற்ற சமூகமாக தமிழ்மக்கள் இருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (18) நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்டுட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இவ்வாறு தெரிவித்தார்.

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்பட்ட, உலகத் தமிழர்களின் ‘வலி சுமந்த மண் இன்றோடு 12 ஆண்டுகள் கடந்து செல்கிறது இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் 2009 ஆம் ஆண்டு மாதம் 18 எம் இனத்தின் குரல்களும் இலங்கை அரசின் ஆயுத அடக்கு முறைக்குள் ஒடுக்கப்பட்டது.

வடக்கிலும் கிழக்கிலும் பல தடையுத்தரவு பெறப்பட்டு எம் இனத்தின் உணர்வுகளை கூட வெளிப்படுத்த முடியாதவாறு அரசின் இராணுவ அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. யுத்தத்தில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதை நினைவு கோர முடியாத தேசமாக கௌதம புத்தரின் பெயரில் நடக்கும் ஆட்சியாளர்களால் தடைகள் இது புத்த பெருமானை கூட ஏளனம் செய்யும் செயல்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்ட நினைவு தூபி இராணுவ முற்றுகையுடன் தகர்க்கப்பட்டு நினைவு கல் இரவோடு இரவாக அகற்றப்பட்ட செயல் சர்வாதிகாரத்தினை விட மேலானது. மூன்று தசாப்தங்களாக தமிழர் தேசத்தில் இடம்பெற்ற யுத்தம் பல்லாயிரம் உயிர்களை காவு கொடுத்த உறவுகள் தங்கள் உள்ள குமுறல்களை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சென்று கண்ணீர் விட்டு கனத்த இதயத்தை ஆசுவாசப்படுத்த அரசின் கொடுங்கோல் ஒருபோதும் இடங்கொடுக்க போவதில்லை தமிழர்களை நிம்மதியாக வாழ விட போவதில்லை என்ற சமிக்கையாக இதனை பார்க்க முடிகின்றது.

ஒருபோதும் சிங்கள தேசம் நிம்மதியாக வாழ விடாது என்பதையே காலா காலமாக அடக்குமுறைகள் மூலம் சர்வதேசத்திற்கு உணர்த்துகின்றது என்றார்.