உயர்நீதிமன்ற தீர்ப்பு ராஜபக்ஷவின் தோல்வியை வெளிப்படுத்தியுள்ளது – ரணில்

ranil
ranil

கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது ராஜபக்ஷ ஆட்சியின் படுமோசமான தோல்வியை வெளிப்படுத்துவதாக உள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மறுபுறம் நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் சட்டவாக்கச் சபையின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாகவும் அந்த தீர்ப்பு அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுடன் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதுடன் , அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,

துறைமுக நகர் குறித்து பல்வேறு சர்ச்சைகள் தற்போது எழுந்துள்ளன. இதற்கு அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளே காரணமாகின்றது.

நாட்டிற்கு நன்மை ஏற்படும் வகையிலேயே எந்தவொரு பொருளாதார சார் சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் உலகில் எந்தவொரு நாடும் செய்யாத விடயத்தை துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலத்தில் அரசாங்கம் உள்ளடக்கியிருந்தது.

அதன் பாரதூரதன்மையை உணர்ந்தே பலரும் உயர் நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நாட்டிற்கு நன்மை ஏற்படும் வகையில் தீர்ப்பும் அமைந்துள்ளது.

அடுத்தக்கட்டமாக பொருளாதார அபிவிருத்திகள் குறித்து சிந்திக்க வேண்டும். துறைமுக நகரை பொறுத்தவரையில் பிராந்தியத்தின் முக்கிய நிதி நகரமாக அமையப்பெறவுள்ள நிலையில் இங்கு இந்திய முதலீட்டாளர்களின் வருகை கேள்விக்குறியாகியுள்ளது.

அதற்கு இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையற்ற தன்மையே காரணமாகின்றது. இந்த நிலைமை சீனாவிற்கும் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும்.

எவ்வாறாயினும் துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்றின் தீர்ப்பின் பிரகாரம் 24 மணித்தியாலயத்தில் துறைமுக நகரில் வர்த்தகத்தை எந்தவொரு தரப்பினராலும் ஆரம்பிக்க முடியாது என்பதுடன் இலங்கையின் உள்ளக பொறிமுறைக்கு அமைவாக இரு வாரத்திற்குள் பூர்வாங்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடியதாக இருக்கும். இந்த தன்மையானது நாட்டின் தேசிய சட்ட கட்டமைப்பிற்கு முக்கியமானதாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.