அரசியலமைப்பை மீறி துறைமுகநகரத்தை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சி

2be9f14d6d8ad98a93ea14e7356ff4d6 XL
2be9f14d6d8ad98a93ea14e7356ff4d6 XL

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு வெளிப்படுத்தப்படவுள்ள மக்களின் எதிர்ப்பை முடக்குவதற்காகவே நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ராஜபக்ஷாக்களுக்கு கிடைக்கவுள்ள பிரத்தியேக இலாபத்தை கருத்திற் கொண்டே அரசியலமைப்பை மீறியேனும் துறைமுகநகரத்தை சீனாவிற்கு தாரை வார்க்க அரசாங்கம் முயற்சிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தற்போதைய அரசாங்கம் சீனா கூறுவதற்கு ஏற்பவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் தான் முழு நாடும் முடங்கவுள்ள சூழலிலும் கூட , நாடாளுமன்றம் அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. தமக்கு பிரத்தியேகமாக கிடைக்கவுள்ள இலாபத்தைக் கருத்திற் கொண்டே அரசியலமைப்பை மீறியேனும் துறைமுக நகரத்தை சீனாவிற்கு தாரை வார்த்துவிட வேண்டும் என்று அரசாங்கம் அவசரப்படுகிறது.

ஒரே நாடு, ஒரே சட்டம் எனக் கூறி ஆட்சியைக் கைப்பற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது ஒரே நாட்டில் இரு சட்டங்களை உருவாக்கியுள்ளார். மகாசங்கத்தினர், புத்தி ஜீவிகள் மற்றும் பொது மக்களுக்கு இது தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கான வாய்ப்பினை அரசாங்கம் வழங்க வேண்டும். அதனை விடுத்து சீனாவின் ஆலோசனைக்கமைய மாத்திரம் செயற்படக் கூடாது.

முற்று முழுதாக மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் தேசிய சொத்துக்களை விற்று அதனை செய்ய இடமளிக்க முடியாது. இதனை ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக எதிர்க்கிறது.

மேலும், 75 வீதம் உள்நாட்டவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளமையிலிருந்து, 25 வீதமான வெளிநாட்டவர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்பதை அரசாங்கமே ஒத்துக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டாலும் மக்கள் ஒருபோதும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.